4 நாளில் திருமணம்... போலீசார் கண்முன்னே மகளை சுட்டுக்கொன்ற தந்தை; ம.பி.,யில் அதிர்ச்சி

8


குவாலியர்: திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை போலீசாரின் கண் முன்னே தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவாலியர் அருகே கோல்கா மந்திர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குஜார். இவருக்கு தனு குஜார்,20, என்ற மகள் இருந்தார். இவரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு தனுவின் குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவித்த நிலையில், பிறகு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், தனுவுக்கு உறவினர் ஒருவருடன் ஜன.,18ம் தேதி திருமணத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தனுவை அவரது தந்தை மகேஷ் அடித்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வேதனை தாங்க முடியாத தனு, தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், "என்னுடைய விருப்பமில்லாமல் கட்டாய திருமணத்திற்கு என்னுடைய தந்தை மகேஷ் ஏற்பாடு செய்துள்ளார். இந்த திருமணத்தில் எனக்கு சம்மதம் இல்லை. எனவே, என்னை கொன்று விடுவேன் என்று என்னுடை தந்தை மிரட்டி வருகிறார். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், என்னுடைய தந்தையும், குடும்பத்தினரும் தான் பொறுப்பு," எனக் கூறியிருந்தார்.

வீடியோ வைரலான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அம்மாவட்ட பஞ்சாயத்தினர் முன் தனுவை வைத்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, நாட்டு துப்பாக்கியால் மகேஷ் தனது மகள் தனுவை சுட்டுள்ளார். அவரோடு, உறவினரான ராகுலும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மகேஷை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ராகுலை தேடி வருகின்றனர்.

Advertisement