இந்திய தேர்தல் குறித்து தவறான தகவல்: மன்னிப்பு கோரியது 'மெட்டா' நிறுவனம்

1

புதுடில்லி: கடந்த 2024ல் நடந்த தேர்தலில் ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் வெற்றி பெறவில்லை என 'மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜூக்கர்பெர்க் கூறியதற்கு அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

பாட்காஸ்ட்டில் பேசிய 'மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க்,' 2024 உலகம் முழுவதும் மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தேர்தலை சந்தித்தன. ஆனால், ஆட்சியில் இருந்த கட்சிகள் பணவீக்கம், பொருளாதார பிரச்னை, கோவிட்டை கையாண்டது உள்ளிட்ட ஏதாவது ஒரு விஷயம் காரணமாக ஆட்சியை பறிகொடுத்தன,'' எனக்கூறியிருந்தார்.

இதனையடுத்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு தலைவர் பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயக நாட்டின் மீதான தவறான தகவல், அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இந்த தவறுக்காக அந்த நிறுவனம், பார்லிமென்ட் மற்றும் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என எச்சரிக்கை விடுத்தார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற அடிப்படையில் 2024 ல் இந்தியாவில் நடந்த தேர்தலில் 64 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதான தங்களின் நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
கோவிட்டிற்கு பிறகு 2024 ல் நடந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட அனைத்து அரசுகளும் தோல்வியடைந்தன என்பது தவறான தகவல். 80 கோடி பேருக்கு இலவச உணவு 220 கோடிபேருக்கு இலவச தடுப்பூசி, கோவிட் காலத்தில் உலக நாடுகளுக்கு உதவி என இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா முன்னிணியில் உள்ளது. பிரதமர் மோடியின் 3வது வெற்றி என்பது சிறந்த நிர்வாகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த சான்று.
மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் இருந்து தவறான தகவல்களைப் பார்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது. உண்மைகளையும், நம்பகத்தன்மையயும் நிலைநிறுத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.


இதனையடுத்து,மன்னிப்பு கேட்டு, மெட்டா நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் ஷிவ்நாத் துக்ரால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மரியாதைக்குரிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, 2024 ல் நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்ற மார்க் ஜக்கர்பெர்க்கின் கருத்து பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவிற்கு இது பொருந்தாது.
இந்த கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம். மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு. அதன் புதுமையான எதிர்காலத்தின் மையத்தில் இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement