4 மாத சம்பளம் இல்லை: வேதனையில் ஹிமாச்சல் அரசு பஸ் டிரைவர் தற்கொலை

21

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் அரசு பஸ் டிரைவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நான்கு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக, இறப்பதற்கு முன்பு அவர் கூறிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.


ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது.இங்குள்ள மண்டி மாவட்டத்தில் தரம்பூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவராக இருப்பவர் சஞ்சய்குமார். இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு கடைசியாக அவர் பேசியதை குடும்பத்தினர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர்.


அதில் அவர்,' தனக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலாளர் வினோத் குமார் என்பவர் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். என்னை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, எப்படி வேலை பார்க்க வேண்டும் என கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கும்' என அவர் மிரட்டி வந்ததாக கூறியுள்ளார்.


தற்போது இந்த விவகாரம் மாநிலத்தில் புதிய அரசியல் மோதலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெய்ராம் தாக்கூர் கூறியதாவது: மாநில அரசு நிதி நிலைமையை மோசமாக கையாண்டு வருகிறது. வளர்ச்சி பணிகள் தடைபட்டு உள்ளன. ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டி உள்ளது. உயிர்காக்கும் மருந்து வாங்குவதற்கு உட்பட சுகாதார துறைக்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


இதனை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, 'பா.ஜ., தேவையில்லாமல் பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. உண்மையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதுடன் மக்களை பயத்தில் ஆழ்த்தி வருகிறது. பா.ஜ., ஆட்சியில் தான் மாநில அரசின் நிதி நிலைமை மோசமாக இருந்தது' என பதிலடி கொடுத்து உள்ளது.

பிரச்னைகள்



ஹிமாச்சல பிரதேச மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், பல மாதங்களாக தங்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், நிதி நெருக்கடி ஏற்படுவதாகவும், கடன் வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவதாகவும் புகார் தெரிவித்து உள்ளனர்.

உயர் அதிகாரிகள் துன்புறுத்துவதாக ஊழியர்கள் புகார் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் டிரைவர்கள் மற்றும் நடத்துநர்கள் பலர், தங்களுக்கு அதிக வேலை வழங்கப்படுகிறது, தேவையில்லாமல் அபராதம் விதிக்கப்படுவதுடன், சிறுசிறு பிரச்னைகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என மிரட்டல் விடுக்கின்றனர் என குற்றம் சாட்டி உள்ளனர்.

போக்குவரத்து கழக ஊழியர்கள், பாதுகாப்பு இல்லாத சூழலில் மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் உடல்நல பரிசோதனை ஏதும் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு முன்னரும் போக்குவரத்து கழக ஊழியர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார். 2023 மே மாதம், பணியில் இருந்த ஊழியர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement