இப்படி பண்ணலாமா ராமா?



சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு பொழுது விடிவதும், முடிவதும் ராமர் தரிசனத்தோடுதான்..அப்படிப்பட்டவருக்கு ஒரு நாள் தான் வணங்கும் ராமர் காணாமல் போனால் என்ன நேரிடும்..என்பதை தியாராஜராக நடித்த நடிகர் டிவி வரதராஜன் அழுது புலம்பி உருக்கமாக நடித்ததுடன் ரசிகர்களையும் அழவைத்துவிட்டார்.

ஸ்ரீ தியாராஜரின் ஆராதனை திருவிழா திருவையாறில் இந்த பொங்கல் திருநாளில் துவங்கியது அவருக்கு இங்கிருந்தே ஆராதனை செய்யும் வகையில் அவரது புகழைப்பாடும் ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகம் 175 வது முறையாக சென்னை வாணிமகாலில் மேடையேற்றப்பட்டது.
Latest Tamil News
டிவி வரதராஜன் தானே இயக்கி தியாகராஜராகவும் நடித்த இந்த நாடகம் தியாகராஜர் பற்றிய முழுவிவரத்தையும் அறியும் வகையில் அமைந்திருந்தது.

பொன் வேண்டாம் பொருள் வேண்டாம் ராமரின் அருள் ஒன்றே போதும் என்று வாழ்ந்த தியாகராஜர் வாழ்க்கையை மிக அழகாக சித்தரித்திருந்தார் என்பதைவிட தியாராஜராகவே வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம்.

அரசர் சிறைப்படுத்த முடிவு செய்கிறார்,சொந்த அண்ணனே தியாகராஜர் உயிராக மதிக்கும் ராமர் சிலையைத் திருடிச் செல்கிறார், இந்த அனைத்து சோகத்தையும் தனது கீர்த்தனைகளால் பாடிக்கடக்கிறார் தியாகராஜர்.
Latest Tamil News
அதிலும் தான் அன்றாடம் தரிசித்து கொண்டாடும் ராமர் விக்ரகம் காணாமல் போனதை அறிந்து அவர் அதை தேடி அழுது புலம்பும் காட்சியில் அனைவரையும் உருக்கிவிட்டார்.

நான் ஒரு நாள், ஒரு பொழுது உன்னிடம் சொல்லாமல் வெளியே போயிருப்பேனா?ஆனால் நீ மட்டும் என்னிடம் சொல்லாமல் போய்விட்டியேடா ராமா!இது நியாயமா? நீ இல்லாமல் நான் என்ன செய்வேனடா? என்றெல்லாம் அழுது புலம்பும் போது அவரது கண்களில் மட்டுமின்றி அனைவரது கண்களிலும் கண்ணீர்.

ஆனால் அது தியாராஜர் கூடவே இருக்கும் ராமபிரான் நடத்தும் நாடகம் என்பதும் அதனால் என்ன நன்மை சங்கீத உலகிற்கு கிடைத்தது என்பதையும் நாடகம் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.அடுத்து இந்த நாடகம் சென்னையில் அடுத்த வாரம் நடைபெறுகிறது, எங்கே என்ற விவரத்தை 9444069292 என்ற எண்ணிற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த நாடகத்தின் மிகப்பெரிய ஹைலைட் மற்றும் புதிய சேர்க்கை என்னவென்றால் சங்கீத மும்மூர்த்திகளாக விளங்கிய சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் சமகாலத்தவர் மற்றுமின்றி தங்களுக்குள் சகோதரத்துவத்தையும் போற்றிவந்தனர் ஆனால் இது பல பேருக்கு தெரியாது, இதை தெரியப்படுத்தும் வகையில் மூவரும் சேர்ந்து ராமரைப் போற்றி பாடும் பாடல் காட்சியை சேர்த்திருந்தார், இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.

(நாடகத்தின் இடைவேளையின் போது இது குறித்து வரதராஜன் பேசும் போது,மார்ச் மாதத்தில் சங்கீத மும்மூர்த்திகளை மையமாகக் கொண்டு ஒரு நாடகம் போடுகிறோம் அதற்கான டிரையர்தான் இது என்றார்,ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.)

ஒரு வீணையின் நாதத்தைப் போல செல்லும் இந்த நாடகத்தை இசையை விரும்பும் ஒவ்வொருவரும் பார்த்து ரசிக்க வேண்டும்,நீங்கள் இசையை விரும்புபவர்தானே?

-எல்.முருகராஜ்

Advertisement