பெங்களூர் ஈஷா யோக மையத்தில் மஹாசூலம் சன்னதி துவக்க விழா!
பெங்களூர் ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னிலையில் “மஹாசூலம் சன்னதி” துவக்க விழா 14/01/2025 கோலாகலமாக நடைபெற்றது. மகர சங்கராந்தி - பொங்கல் தினத்தில் நடைபெற்ற இவ்விழாவில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
'சத்குரு சன்னதி' என்றழைக்கப்படும் பெங்களூர் ஈஷா யோக மையத்தில் கடந்த ஆண்டு (2024) பொங்கல் தினத்தன்று, ஆதியோகி திருவுருவச் சிலை முன்பு சிவாபரணங்கள் என்று கூறுப்படும் நந்தி மற்றும் மஹாசூலத்தை சத்குரு பிரதிஷ்டை செய்தார். இதில் குறிப்பாக 54 அடி உயர மஹாசூலம் கடந்த ஒரு வருடமாக குறிப்பிட்ட கோணத்தில் கிடை நிலையில் இருந்தது. தற்போது மஹாசூலம் ஒரு மண்டபத்தின் மேல் நேராக நிற்கும் வண்ணம் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த மகாசூலத்தின் மிகவும் தனித்துவமான அம்சமாக அதனை ஏந்தி இருக்கும் மண்டபம், நான்கு கல் சக்கரங்களைக் கொண்ட ஒரு தேர் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல் சக்கரங்களும் சுமார் ஒரு டன் எடை கொண்டவை. ஆனால் அந்த சக்கரங்களை நம்மால் சுழல வைக்க முடியும்.
மஹாசூலத்தின் ஆழமான அனுபவத்தைப் பெற விரும்புவோர் சக்கரங்களை சுழல வைக்கும் செயல்முறையை தேர்வு செய்யலாம். இதன் மூலம் ஏற்படும் தொடர்பு உண்மையில் ஒருவரின் உடல், மனம் மற்றும் ஆற்றல்களை மாற்றக்கூடியதாக இருக்கும் என்று சத்குரு கூறியுள்ளார்.
திரிசூலம் குறித்து சத்குரு கூறுகையில் “திரிசூலம் ஒரு ஆயுதம் அல்ல. மேலோட்டமாகப் பார்த்தால் அது மூன்றாகத் தோன்றினாலும், ஆழத்தில் எல்லாம் ஒன்றுதான் என்பதைக் காட்டும் குறியீடாகும். யோக மரபில், திரிசூலம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் எனக் காலங்களையும், மனித சக்தி அமைப்பின் மூன்று முக்கிய நாடிகளான இடா, பிங்கலா மற்றும் சுஷும்னாவையும் குறிக்கிறது.” எனக் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மகாசூல பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, சத்குரு "நாம் திரிசூலத்தை மைய நாடியான சுஷும்னா என்ற அம்சத்தை கொண்டு பிரதிஷ்டை செய்தோம். ஏனெனில் அது ஒருவரின் ஆன்மீக பரிணாமத்திற்கு மட்டுமே. அதனால் தான் இது மஹாசூலம் என்று அழைக்கப்படுகிறது” எனக் கூறினார்.
இவ்விழாவில் ஈஷாவின் சந்நியாசிகள் மற்றும் பிரம்மச்சாரிகளால் சிறப்பு பஞ்ச பூத கிரியா நடத்தப்பட்டது. இதனுடன் பூத சுத்தி அல்லது அடிப்படை சுத்திகரிப்பு எனப்படும் சக்திவாய்ந்த யோக செயல்முறையை சத்குரு மக்களுக்கு வழங்கினார்.
பூத சுத்தி செயல்முறை குறிப்பாக பலவீனமான உடல், உளவியல் ஸ்திரமின்மை, தொந்தரவுடன் கூடிய உறக்கம் அல்லது நிலையான பய உணர்வு ஆகியவற்றால் அவதிப்படுபவர்களுக்குநன்மை பயக்கும். மேலும் இது ஒருவரின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கும் துணைபுரியும்.
பெங்களூரு சத்குரு சன்னதியில் இந்த ஆண்டு பொங்கல் விழா “ஜாத்ரே” எனும் 4 நாள் கொண்டாட்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், கால்நடைகளின் கண்காட்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், உணவு கடைகள் மற்றும் பல அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.
இவ்விழா அங்குள்ள உள்ளூர் கிராம மக்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு துடிப்பான சந்தையாக மாறியுள்ளது. இது அவர்களுக்கு மதிப்புமிக்க வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் பார்வையாளர்களை சந்திக்கவும் வாய்ப்பளித்தது.
பெங்களூர் சத்குரு சன்னதி சத்குரு அவர்களால் 2022 ஆம் ஆண்டு, 112 அடி ஆதியோகி திருவுருவச் சிலை மற்றும் யோகேஸ்வர லிங்க பிரதிஷ்டையுடன் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகா மண்டபம், நந்தி மற்றும் மஹாசூலம் ஆகியவற்றை சத்குரு அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரதிஷ்டை செய்தார். இதில் நந்தியின் உயரம் 21 அடியாகவும், சூலத்தின் உயரம் 54 அடியாகவும் இருக்கும் வகையில் உலோகத்தினால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நந்தியின் திருவுருவச் சிலை உலகின் மிகப்பெரிய உலோக நந்திகளில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.