மங்கிப்போனது ஒலிம்பிக் பதக்கம்; மனு பாகர், அமன் ஷெராவத் புகார்
புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் பதக்கம் தரமில்லாமல் இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய விளையாட்டு வீரர்கள் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பாரிஸ் ஒலிம்பிக் நடைபெற்றது. இதில், இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது. இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 2 பதக்கம் வென்றார் மனு பாகர். அதேபோல, 57 கிலோ மல்யுத்த போட்டியில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தினார்.
இந்த நிலையில், பதக்கம் வாங்கிய 4 மாதங்களில், அவை நிறம் மாறி விட்டதாகவும், தரமற்ற பதக்கங்கள் வழங்கப்பட்டிருப்பதாக இந்திய வீராங்கனை மனு பாகர் குற்றம்சாட்டியுள்ளார். அதைப்போல, அமன் ஷெராவத்தும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக இருவரும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் புகார் அளித்துள்ளனர். தரமுள்ள பதக்கங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று முறையிட்டுள்ளனர்.
ஏற்கனவே, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்களின் தரம் குறித்து புகார் அளித்துள்ளனர். தற்போது, இந்திய வீரர்களும் புகார் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பாரிஸ் பதக்கம் 450 கிராம் எடை கொண்டிருக்கும். அதன் மையத்தில் ஈபிள் டவரில் பயன்படுத்தப்பட்ட இரும்பு 18 கிராம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதக்கங்களை மோனய் டி பாரிஸ் மற்றும் லக்ஷரி ஜிவல்லர் ஜாமெட் எனும் பிரபல நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. மொத்தம் 5,084 பதக்கங்களை பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக தயாரித்து கொடுத்துள்ளனர்.
தற்போது, தரமில்லாதவை என உறுதி செய்யப்பட்ட பதக்கங்களுக்கு பதிலாக, தரமுள்ள பதக்கங்களை வீரர், வீராங்கனைகளுக்கு கொடுக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இந்த வாரம் முதல் அதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.