‛‛நீ வேற நாடு, நான் வேற நாடு இல்லைடா, எல்லோரும் ஒரே நாடு இந்தியா'': சொன்னதை செய்வீங்களா விஜய்?

21


‛‛நீ வேற நாடு, நான் வேற நாடு இல்லைடா. எல்லோரும் ஒரே நாடு இந்தியா'' - இந்த ‛‛பஞ்ச்'' வசனம், தலைவா படத்தில் நடிகர் விஜய் பேசியது. அரசியலில் நுழையும் அச்சாரத்துடன் அவர் பேசிய வசனம் இது.

வசனமெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், அரசியலில் ‛‛தொபுக்கடீர்'' என குதித்த பிறகு, இந்த வசனத்தில் சொன்னபடி நடந்து கொள்கிறாரா என்பது தான் பலரது கேள்வி.

தமிழக அரசியலில் ஏதாவது மாற்று அரசியலை அல்லது வித்தியாசமான அணுகுமுறையை முன் வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் கட்சியான 'த.வெ.க'-வின் (தமிழக வெற்றிக் கழகம்) கொள்கைகள், திமுக.,வின் கொள்கைகளின் ஈயடிச்சான் காப்பியாக இருப்பது தான் இந்த கேள்விக்கு காரணம்.

தமிழகத்தில் பங்காளி கட்சிகளான திமுக.,வும், அதிமுக.,வும் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்றன. பழம்பெரும் தலைவர்கள் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைந்துவிட்டார் விஜய். இவரது வருகையை எதிர்பார்த்த நடுநிலை வாக்காளர்கள், இவராவது ஏதாவது மாற்றத்தை தருவாரா என்று எதிர்பார்த்தனர். இன்னும் எதிர்பார்க்கின்றனர்.

Latest Tamil News

கட்சி ஆரம்பிக்கும்போதே ஈவெரா, அம்பேத்கர் கொள்கைகளை பின்பற்றுவோம் என அறிவித்தார். அப்போதே ஈவெரா, அம்பேத்கர் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் பல கட்சிகள் ஏற்கனவே இருக்கும்போது, புதிதாக இவர் எதற்கு என்று நடுநிலையாளர்கள் யோசித்தனர்.

அதோடு விட்டாரா... நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, பள்ளிக் கல்வியில் இருமொழிக்கொள்கை, கல்வியை மாநில பட்டியலுக்குள் மாற்றுதல், கவர்னர் பதவி தேவையற்றது, தை திருநாளுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொன்னது.... என்று திமுக பாடி வரும் அதே பழைய பாட்டை தான் இவரும் பாடினார். டியூன் கூட மாறவில்லை. இதுவும் நடுநிலையாளர்களை முணுமுணுக்க வைத்தது.

சரி, ஏதோ அரசியலுக்கு வந்த அவசரத்தில் சில கொள்கைகளை அவர் வெளியிட்டு இருக்கலாம். இனிமேலாவது அவர் தனது பிரகடனங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நடுநிலையாளர்கள் நினைக்கின்றனர்.


காலம் மாறி விட்டது





திராவிட கட்சிகள் தோன்றியபோது தமிழகத்தில் இருந்த சூழ்நிலை வேறு. அந்த நேரத்தில் திராவிடம், தமிழ் தேசியம், சமூக நீதி போன்ற கொள்கைகள் காலத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது உலகமயமாக்கல், தாராள பொருளாதாரம் போன்ற நவீன கொள்கைகள் வந்துவிட்டன. ஒரே மாநிலத்தில் படித்து அதே மாநிலத்திலேயே வேலை பார்க்கும் காலம் மலை ஏறிவிட்டது.

லேட்டஸ்ட் புள்ளி விபரத்தின்படி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி தீவுகள், மொரீசியஸ், இந்தோனேசியா, மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்ரிக்கா, செசல்ஸ், கயானா, மியான்மர், தாய்லாந்து, டுபாகோ தீவு, பிரெஞ்ச் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்பட மேலும் பல நாடுகளில் தமிழர்கள் பரவலாக வாழ்கின்றனர்.

Latest Tamil News

இப்படி உலகலாவிய ஒரு இனமாக தமிழர்கள் மாறிய பிறகு, இன்னமும் இரு மொழி கொள்கை, திராவிடம் என்று பழமைவாதம் பேசிக்கொண்டு இருந்தால் அது இந்த தலைமுறை தமிழர்களை கவராது என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்.

இது இன்டர்நெட் யுகம். மொழி என்பதே அறிவியல் தொழில்நுடபத்தின் ஆளுகைக்குள் சென்று விட்டது. அப்படி இருக்கையில் விஜயும் அதற்கேற்ப தனது கொள்கைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அவரது ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அதாவது 40 வயதுக்கு உட்பட்டவர்கள். நவீன காலத்தில் வளர்பவர்கள். திராவிட கொள்கைகள் பற்றிய அறிதலும் இவர்களுக்கு இல்லை. அக்கறையும் இல்லை. ஏனென்றால் அது தேவை இல்லாதவர்கள் இவர்கள்.

அப்படிப்பட்டவர்களிடம் போய் துருப்பிடித்து காலாவதியான கொள்கைகளை பேசுவது நல்லதல்ல. மாற்றத்திற்காக காத்திருப்போரிடம் மாற்று அரசியலைத் தான் விஜய் பேச வேண்டும்.

‛‛ஐயோ! அப்படி பேசினால், தன்னை தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் எதிரானவர் என்று முத்திரை குத்தி விடுவார்களோ'' என்று அவர் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், அப்படி முத்திரை குத்துவது யார் என யோசிக்க வேண்டும். அவர்கள் எல்லோருக்குமே 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்களின் எண்ணிக்கையும் இப்போது குறைவு. முத்திரை குத்தக் கூடிய பெரிய தலைவர்களும் யாரும் இல்லை.

இப்படிப்பட்டவர்கள் எல்லோருமே சமூகவலை தளங்களில் மட்டுமே இயங்கி, வீடுகளில் முடங்கிக் கொண்டு அரசியல் செய்பவர்கள். களப்பணியாளர்களும் அல்ல. எனவே, இவர்கள் குத்தும் முத்திரைக்கு எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை.

எனவே, அது பற்றியெல்லாம் கவலைப்பாடாமல், சிலர் விரிக்கும் போலி வலைகளில் சிக்காமல், அறுந்துபோன கொள்கைகளைப் பிடித்து தொங்கிக்கொண்டிராமல் பரந்து விரிந்த சிந்தனையுடன், உலகளாவிய பார்வையுடன், தேசிய கொள்கையுடன் அரசியல் செய்தால் நிச்சயம் விஜய்க்கு பலன் உண்டு.

அதைத் தான் அவர் செய்ய வேண்டும். செய்வார் என நம்புவோம்!!

Advertisement