பீஹாரில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு செல்கிறாரா முன்னாள் மத்திய அமைச்சர்?

பாட்னா: முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான பசுபதி குமார் பராஸின் நிகழ்ச்சியில் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தேஜ் பிரதாப் பங்கேற்றது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பராஸ். இவர், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார்.
ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சியை நடத்தி வருகிறார். இவருக்கும், ராம் விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வானுக்கும் பேச்சுவார்த்தை இல்லை.
லோக்சபா தேர்தலில் பீஹாரின் ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிட விரும்பினார் பாரஸ். ஆனால், இந்தத் தொகுதியில் சிராக் பாஸ்வானுக்கு ஒதுக்கப்பட்டதால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், அவர் வீட்டில் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த வழிபாடு தொடர்பான நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜ் பிரதாப் ஆகியோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக பசுபதி குமார் பராஸ் கூறியதாவது: மகர சங்கராந்தியை முன்னிட்டு, நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, தே.ஜ., ஆர்ஜேடி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தேன். அவர்களும் வந்துள்ளனர். இது நல்ல துவக்கம் தான். நான் மகாகட்பந்தன் கூட்டணியில் சேரவில்லை. லாலு பிரசாத் உடன் நீண்ட கால நட்பு மற்றும் குடும்ப உறவு உள்ளது. எங்கு சந்தித்தாலும் அவருக்கு மரியாதை அளிப்பேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர். சிராக் பாஸ்வான், அவரது நீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைக்காததால், நானும் அவரை அழைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரை, மீண்டும் கூட்டணிக்கு வரும்படி லாலுபிரசாத் அழைப்பு விடுத்து இருந்தார்.
இதனை நிதீஷ்குமார் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அவர், பசுபதி குமார் பராஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது கவனிக்கத்தக்கது.

Advertisement