சென்னை - புதுச்சேரி - கடலுார் ரயில் பாதை திட்டத்தில் சிக்கல் நிதி ஒதுக்காததால் திட்டம் கிடப்பில்

சென்னை,
சென்னை - புதுச்சேரி - கடலுார் புதிய வழித்தட திட்டம், நீண்ட காலமாக அறிவிப்பு நிலையிலேயே முடங்கி உள்ளது.

சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் ரயில் தடங்களில் நெரிசல் அதிகரித்து வருவதால், மற்றொரு புதிய வழித்தடத்தை இணைக்கும் வகையில், சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி வழியாக கடலுாருக்கு திட்டம் தீட்டப்பட்டது.

இதற்காக, சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுாருக்கு, 179 கி.மீ., துாரத்திற்கு புதிய பாதை அமைக்க, 2007ம் ஆண்டு ரயில்வே ஒப்புதல் அளித்தது. சர்வே பணிகளும் நடந்தன.

துவக்கத்தில், 550 கோடி ரூபாயாக இருந்த திட்ட மதிப்பு தற்போது, 1,500 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த மத்திய பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்கு வெறும் 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:

சென்னை - புதுச்சேரி - கடலுார் புது ரயில் பாதை திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி மக்களின் ரயில் போக்குவரத்திற்கான இந்த பிரதான திட்டத்திற்கு, மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.

மாநில அரசு நிலத்தையும் ஒதுக்கித் தரவில்லை. இதனால், இத்திட்டப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. வரும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில் உள்ள புதிய ரயில் பாதை திட்டங்களில், சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுார் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்திற்கு வரும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று நம்புகிறோம். தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் இணைந்து பணியாற்றினால், இத்திட்டத்தை விரைவாக மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement