4.90 லட்சம் சதுர அடியில் மாதவரத்தில் புதிய 'மால்'
சென்னை,
சென்னை மாதவரத்தில், 4.90 லட்சம் சதுர அடியில் வணிக வளாகத்தை, ஆந்திராவைச் சேர்ந்த என்.டி.ஆர்., 'ஐகானிக் மால்' நிறுவனம் கட்டுகிறது.
சென்னையில் ராயப்பேட்டை, அண்ணா சாலை, மயிலாப்பூர், அரும்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, அண்ணா நகர் என பல்வேறு பகுதிகளில் பிரமாண்ட மால்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த மால்களில் பொதுமக்கள் வருகை அதிகரிப்பதால், மேலும் புதிய மால்கள் கட்ட பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
வண்டலுார் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்ட பின், ஜி.எஸ்.டி., சாலையில் சில நிறுவனங்கள் மால்கள் கட்ட முன்வந்துள்ளன. இதே போல், வடசென்னையில் ஒரு பகுதியான மாதவரத்தில், பிரமாண்ட மால்கள் வரத் துவங்கியுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மாதவரம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள், வணிக வளாகங்கள் கட்ட கட்டுமான நிறுவனங்கள் ஆர்வமாக இறங்கியுள்ளன.
இந்த வகையில் ஜி.என்.டி., சாலையில், மாதவரம் ரவுண்டானா - மூலக்கடை சந்திப்புக்கு இடையே, என்.டி.ஆர்.ஐகானிக் மால் என்ற பெயரில், புதிய வணிக வளாகம் கட்ட, ஆந்திராவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் இறங்கியுள்ளது.
இங்கு, 4.90 லட்சம் சதுர அடி பரப்பளவில், வணிக வளாகம், மல்டி பிளக்ஸ், உணவகம், பொழுதுபோக்கு மையம் ஆகியவை அடங்கிய பிரமாண்ட மால் கட்டப்படுகிறது. இதற்கான வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு, திட்ட அனுமதி மற்றும் கட்டுமானத்துக்கான பூர்வாங்கப் பணிகளை, அந்நிறுவனம் துவக்கி உள்ளது.
இதனால், வடசென்னையில் வசிக்கும் மக்கள், மால்களை பயன்படுத்த தென்சென்னை நோக்கி வருவது படிப்படியாக குறையும் என, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் கூறினர்.