பயங்கரவாதியை கொல்ல முயற்சி : தனிநபர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை
புதுடில்லி : அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய முயன்றது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தனிநபர் ஒருவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை, நியூயார்க்கில், 2023ல் சிலர் கொலை செய்ய முயன்றனர். இந்திய ஏஜன்ட் ஒருவருக்கு இதில் தொடர்புள்ளது என, அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான, 'ரா' அமைப்பின் முன்னாள் ஏஜன்ட் விகாஸ் யாதவுக்கு இந்தக் கொலை முயற்சியில் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்கா கூறியது.
மேலும், விகாஸ் யாதவ் கூறியபடி, நிகில் சோப்ரா என்ற இந்தியர் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியது. செக் குடியரசில் இருந்த அவர் கைது செய்யப்பட்டு
அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இதற்கிடையே, மற்றொரு ஆள் கடத்தல் புகாரில் விகாஸ் யாதவ் டில்லியில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். ஆனால், இவர் ரா அமைப்புக்காக பணியாற்றவில்லை என, மத்திய அரசு கூறியிருந்தது.
வடஅமெரிக்க நாடான கனடாவில், மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட வழக்கில், இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என, அந்த நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்தது. அதே நேரத்தில், அமெரிக்க அரசு அளித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்த உயர்நிலை குழு ஒன்றை, 2023 டிச.,ல் நியமித்தது. இந்தக் குழு தன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் தனிநபர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், அவருடைய பெயர் மற்றும் விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
குறிப்பிட்ட தனிநபர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க உயர் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. அந்த தனிப்பட்ட நபரின் முந்தைய நடவடிக்கைகள், பல குற்ற
வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா அளித்துள்ள தகவல்கள், தொடர் தகவல் பரிமாற்றம் மற்றும் நம் நாட்டின் பல விசாரணை அமைப்புகள் அளித்த தகவல்கள், விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக, சில பயங்கரவாத அமைப்புகள், திட்டமிட்ட குற்றங்களை செய்யும் குழுக்கள், ஆயுதக் கடத்தல் குழுக்கள், போதைப் பொருள் கடத்தல் குழுக்கள் செயல்படுவது குறித்தும் இந்த உயர்நிலை குழு விசாரித்துள்ளது.
இவற்றின் அடிப்படையில், நம்முடைய நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகளில் சில திருத்த நடவடிக்கைகள் எடுக்க உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.