ஜாமின் கிடைத்தும் முரண்டு பாபிக்கு நீதிபதி எச்சரிக்கை
கொச்சி,நடிகைக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் கைதான தொழிலதிபர் பாபி செம்மனுாருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் இருந்து வெளியேற மறுத்ததால், கேரள உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
கேரளா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 'செம்மனுார் ஜுவல்லர்ஸ்' என்ற நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனுார். இவர் மீது நடிகை ஹனிரோஸ், எர்ணாகுளம் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
இதையடுத்து, கடந்த 8ம் தேதி பாபியை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவருக்கு கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியது. ஜாமின் கிடைத்த பின்னரும் சிறையில் இருந்து வெளியேற பாபி மறுத்தார்.
'பல்வேறு காரணங்களால் சிறையிலிருந்து விடுதலை பெற முடியாத கைதிகளுக்கு ஆதரவாக, நானும் சிறையில் இருந்து விடுதலை ஆக மாட்டேன்' எனக் கூறி அவர் முரண்டுபிடித்தார்.
ஜாமின் வழங்கிய நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன், இந்த விவகாரத்தை நேற்று தாமாகவே முன்வந்து விசாரித்தார். அப்போது தன் கண்டனத்தை பதிவு செய்த அவர் கூறியதாவது:
ஜாமின் விவகாரத்தில் நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். சிறையில் உள்ள கைதிகளுக்காக நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டாம்.
அவர்களை கவனித்துக் கொள்ள நீதித்துறைக்கு தெரியும். தொடர்ந்து அடம்பிடித்தால், ஜாமினை ரத்து செய்து உங்களை கைது செய்யவும், இரண்டு வாரங்களில் வழக்கை முடிக்க உத்தரவிடவும் முடியும்.
சிறையில் இருந்து நாடகம் நடத்தும் உங்களின் செயல் நீதிமன்றத்துக்கு எதிராக போர் தொடுப்பதற்கு சமம். அனைவரையும் விலைக்கு வாங்க முடியும் என நினைக்கிறீர்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று மாலைக்குள் ஜாமினில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது. இதையடுத்து, காக்கநாடு சிறையில் இருந்து பாபி வெளியே வந்தார்.