சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மீன் மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்,பெரிய காஞ்சிபுரம் பெருமாள் தெரு மீன் மார்க்கெட் எதிரில், மளிகை தெரு சந்திப்பில், பொது கழிப்பறை உள்ளது.
இப்பகுதி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிப்பறையில் இருந்து பாதாள சாக்கடை வாயிலாக வெளியேற வேண்டிய கழிவுநீர், மாறாக 'ரிடர்ன்' ஆகிறது. இதனால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும், கழிப்பறையில் இருந்து துர்நாற்றத்துடன் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், மீன் மார்க்கெட், புதிய ரயில் நிலையம், ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர்.
மேலும், மீன்வெட்டும் இடத்தின் வழியாக, துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல்உள்ளது. எனவே, மீன் மார்க்கெட் அருகில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.