நுாறு நாள் வேலையில் 1,260 பணிகள் நிலுவை ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடியும் வீண்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார்,ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், மத்திய அரசின் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த ஊராட்சிகளில், 1.37 லட்சம் குடும்பங்களில், 1.68 லட்சம் பேர் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு பெற பதிவு செய்துள்ளனர்.

இதில், 1.45 லட்சம்பேருக்கு, 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் வேலை வழங்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40,918 பேர் தினசரி சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர்.

இதுதவிர, நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுதல், சிறு பாலம் கட்டுதல், சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் தேர்வு செய்து, நிதியாண்டு முடிவு பெறுவதற்குள் நிறைவேற்றுகின்றனர்.

கடந்த 2022 - 23ம் நிதியாண்டு 3,902 பணிகளுக்கு, 39.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 3,888 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில், 14 பணிகள் நிலுவையில் உள்ளன.

அதேபோல், 2023 - -24ம் நிதியாண்டு, 914 பணிகளுக்கு, 64.04 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 293 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதில், 627 பணிகள் நிலுவையில் உள்ளன.

நடப்பு 2024- - 25ம் நிதியாண்டில், 791 பணிகளுக்கு, 97.18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 172 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதில், 619 பணிகள் நிலுவையில் உள்ளன. மூன்று ஆண்டுகளில், 5,607 பணிகளில், 4,347 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதம், 1,260 பணிகள் நிலுவையில் உள்ளன.

எனவே, ஊரக வளர்ச்சி துறையினர், நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, துறை உயரதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில்,நடப்பாண்டு தேர்வு செய்த பணிகளில், அதிகமாக குளம் வெட்டும்பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

மழையால் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement