புறநகர் பஸ் நிலையம் அமைவிடத்தில் சூடுபிடிக்கும் ரியல் எஸ்டேட் தொழில் சதுர அடி ரூ.4,000 வரை உயர்ந்தாலும் கிராக்கி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் நகரில் நாளுக்கு நாள் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்காரணமாக, புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை பல ஆண்டுகளாக உள்ளன.
புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு பகுதியிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரசு நிலமான 19 ஏக்கரில், 38 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
பேருந்து நிலையம் அமையும் இடத்தில், மாநகராட்சி நிர்வாகம் வேலி அமைக்கும் பணிகளை மேற்கொள்கிறது.
இதனால், பேருந்து நிலையம் கட்டாயம் இப்பகுதியில் விரைவில் செயல்படும் என்பதால், சுற்றியுள்ள இடங்களில் உள்ள வீட்டு மனைகளின் விலை ஏற்றம் காண துவங்கியுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில் புரிவோர், பொன்னேரிக்கரை சுற்றியுள்ள இடங்களில் வீட்டு மனைகளை வாங்கவும், விற்பனை செய்யவும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர்.
பரந்துார் விமான நிலைய திட்டம் காரணமாக, ஏற்கனவே காரை, வேடல், ஏனாத்துார், நீர்வள்ளூர் சுற்றிய பகுதிகளில் வீட்டு மனைகளின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், பொன்னேரிக்கரையில் புதிய பேருந்து நிலையம் அமைவதால், சதுரடி 2,000 - 3,000 ரூபாய் வரை இருந்த வீட்டு மனைகள், 4,000 ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது.
புதிய ரயில் நிலையம் முதல் பொன்னேரிக்கரை வரை, ஏரிக்கு எதிர்புறம் உள்ள வீட்டு மனைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள வீட்டு மனைகளின் விலையும் கணிசமாக விலையேறி வருகிறது. மனைகளை விற்பனை செய்ய முயற்சிப்பவர்களை, தரகர்கள் பலரும் அணுகி வருகின்றனர்.
எதிர்காலத்தில் இப்பகுதி அதிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறும் என்பதால், எதிர்கால முதலீடாக கருதி இப்பகுதியில் வீட்டு மனைகளை வாங்க முயல்கின்றனர்.
பரந்துார் விமான நிலையம், புறநகர் பேருந்து நிலையம், புதிய ரயில் நிலையம், சென்னை, பெங்களூரு செல்ல தேசிய நெடுஞ்சாலை என, சகல வசதிகளும் இப்பகுதியை சுற்றிலும் அமைகிறது.
இதனால், சதுரடி 4,000 ரூபாயை நோக்கி வீட்டு மனைகள் உயர்ந்து வருகிறது.