ரூ.12 கோடியில் சீரமைத்த 17 ஏரிகள் பாசனத்துக்கு... தயார்! மற்ற ஏரிகளுக்கு நிதி கேட்டு காத்திருக்கும் அதிகாரிகள்
காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமப்புறங்களில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 17 ஏரிகள், நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் வாயிலாக, 11.84 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டன. அதனால், அவை முழுமையாக நிரம்பி, பாசனத்திற்கு தயாராக உள்ளன. மற்ற ஏரிகளையும் சீரமைக்க, நீர்வள ஆதாரத்துறையினர் நிதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகள் பல மோசமான நிலையில் உள்ளன.
இந்த ஏரிகளின் கரைகள் சேதமாகியும், கலங்கல், மதகு போன்றவை சீரமைக்க வேண்டிய நிலையில் இருந்தன.
எனவே, காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள 17 ஏரிகள் அடையாளம் காணப்பட்டு, நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் வாயிலாக, அந்த ஏரிகளுக்கு தேவையான சீரமைப்பு பணிகளை, நீர்வளத்துறை கடந்தாண்டு துவக்கியது.
கரையை பலப்படுத்துவது, கலங்கல், மதகுகளை சீரமைப்பது, வரத்து கால்வாயை துார்வாரி தண்ணீர் செல்ல வழிவகை செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சீரமைப்பு பணி
இதற்காக, நீர்வளத்துறை, 11.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவிட்டுள்ளது. தாமல், முசரவாக்கம், மேல்கதிர்பூர் உள்ளிட்ட 17 ஏரிகளில் சீரமைப்பு பணிகள் முடிந்தன.
அதனால், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையால், இந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பி, அடுத்து வரும் நவரை பருவத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது.
அதனால், இந்த 17 ஏரிகளைச் சுற்றியுள்ள, 1,000 ஏக்கருக்கு மேலான விவசாய நிலங்கள், பாசன வசதி பெற்றுள்ளன.
காஞ்சிபுரம் தாலுகாவில், நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் வாயிலாக கிடைத்த நிதியுதவி போல், பிற திட்டங்களின் வாயிலாகவும் நிதி கிடைத்தால், மோசமான நிலையில் உள்ள ஏரிகளையும், அதற்கான கால்வாய்களையும் சீரமைக்க முடியும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், போதிய நிதியில்லாத காரணத்தால், ஏரிகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்கின்றனர்.
மாவட்டம் முழுதும், 381 ஏரிகள் வாயிலாக, 12.3 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும்.
மேலும், 1.22 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியும்.
ஏரி பாசனத்தை நம்பி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளனர். விவசாயத்திற்கு தயாராக வைத்திருக்க போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், நீர்வளத்துறை அதிகாரிகள் திணறுகின்றனர்.
ரூ.12 கோடி
காவாந்தண்டலம் ஏரிக்கு செல்லும் கால்வாயின் பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், செய்யாற்றில் சேதமான வெங்கச்சேரி அணைக்கட்டை சீரமைக்கவும் தேவையான, 12 கோடி ரூபாயை அரசிடம் அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
அதேபோல், பாலாற்றின் குறுக்கே வெங்கடாவரம் அருகேயும், வெங்குடி பகுதியிலும் தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், நிதி ஒதுக்கப்படவில்லை.
தற்போது, மாகரல் ஏரி 2.7 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல், மாவட்டத்தின் முக்கிய ஏரிகளை சீரமைக்க, தேவையான நிதி தொடர்பான கருத்துருக்களை அரசுக்கு மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் அனுப்பி, பல ஆண்டுகளாகின்றன. ஆனால், நிதி ஒதுக்கப்படவில்லை.
தடுப்பணை, ஏரி சீரமைப்பு, கால்வாய் கட்டுவது என அனைத்து வகையான திட்டங்களுக்கும் நாங்கள் ஏற்கனவே நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அரசு தான் முடிவு செய்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதி கிடைத்த உடனே, டெண்டர் விட்டு பணிகள் துவங்கப்படும். ஏரி சீரமைப்பு செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
- நீர்வளத்துறை அதிகாரி,
காஞ்சிபுரம் மாவட்டம்.