நோய் தாக்கிய நாய்கள் உலா காஞ்சி மருத்துவமனையில் பீதி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பொது, மகப்பேறு, குழந்தை, கண், பல், தோல், என, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கானோர், பல்வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில், 15க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருகின்றன. இதில், ஒரு சில நாய்கள் நோய் தாக்கிய நிலையில் உள்ளன.

நோயால் பாதிக்கப்பட்டு, ரோமம் உதிர்ந்து எலும்பும், தோலுமாக சுற்றித்திரியும் நாய்களால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.

மேலும், குப்பையில் வீசப்படும் உணவுக்காக, அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் நாய்க்கடி பீதியில் உள்ளனர்.

உடலில் உள்ள நோய்க்கு சிகிச்சை பெற வந்தால், மருத்துவமனை வளாகத்தில் உலாவும் நாய்களால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் நோயாளிகள் உள்ளனர்.

மேலும், மருத்துவமனை வளாகத்தில், நாய்கள் அசுத்தம் செய்வதால், துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க, மாநகராட்சியும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement