காணும் பொங்கலுக்கு வண்டலுார் பூங்கா 'ரெடி'
தாம்பரம்,
வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையின்போது, ஏராளமான பார்வையாளர்கள் வருவர். கடந்தாண்டு காணும் பொங்கல் அன்று, 23,000 பேர் மட்டுமே வந்தனர். வண்டலுார் பூங்காவில், டிக்கெட் கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதே பார்வையாளர்கள் குறைந்து வருவதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்தாண்டு காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது.
ஆன்லைன் மற்றும் வாட்ஸாப் வாயிலாக நுழைவு கட்டண டிக்கெட் பெறலாம். நேரடியாக டிக்கெட் பெறும் மையங்களும் திறக்கப்பட்டுள்ளன
பூங்காவில் இருந்து 500 மீட்டர் துாரத்தில், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், கார், பைக், வேன் மற்றும் கனரக வாகனங்களுக்கு நிறுத்துமிடம் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பூங்காவிற்கு பார்வையாளர்களை ஏற்றி செல்ல, இலவச வாகன வசதி உள்ளது
பாதுகாப்பு பணிக்காக 150 போலீசார், சென்னை, வேலுார், தர்மபுரி மற்றும் விழுப்புரம் வட்டங்களை சேர்ந்த 115 வனத்துறையினர், 50 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக 25 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன
பூங்காவிற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் லயன் சபாரி வாகனங்கள் இயங்காது. நெரிசலை சமாளிக்க, மீனகம் மற்றும் பட்டாம்பூச்சி குடில் போன்ற மூடிய அடைப்புகள் மூடப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள், விலங்குகளுக்கு உணவு அளிக்கவோ, கிண்டல் செய்யவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு பார்வையாளர்கள்2015 60,0002016 50,0002017 55,0002018 48,0002019 47,0002020 55,0002022 40,0002024 23,000
கிண்டி சிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சாதாரண நாட்களில், ஒரு நுழைவாயில் செயல்படும். இன்று, மூன்று நுழைவாயில் செயல்படும். ஒவ்வொரு நுழைவாயிலிலும், டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எளிதில் டிக்கெட் எடுக்க, 'கியூஆர் கோடு' வைக்கப்பட்டு உள்ளது. இதோடு, 86676 09954 என்ற 'வாட்ஸாப்' எண்ணில் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். ஆட்டோ, கார், பைக் நிறுத்த தனித்தனி இடவசதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 16,000 முதல் 20,000 பேர் பார்வையிட உள்ளதால், அதற்கு ஏற்ப வசதிகள் செய்துள்ளதாக, பூங்கா நிர்வாக அதிகாரிகள் கூறினர்.