காஞ்சி குமரகோட்ட முருகபெருமான் வைர வேலுடன் வெள்ளி தேரில் பவனி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருளும் முருகப்பெருமான், கோவில் பிரகாரத்தில் பவனி வருவார்.
இதில், ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதியான தை பொங்கல் தினத்தன்று மட்டும் வள்ளி, தெய்வானையுடன், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருவார்.
இந்நிலையில், இக்கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருவதால், நடப்பு ஆண்டு ராஜ வீதிகளில் தேரோட்டம் நடைபெறவில்லை.
கோவில் பிரகாரத்தில் தேரோட்டம் நடந்தது. அதன்படி, தை பொங்கல் தினமான நேற்று முன்தினம் காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை நடந்தது. மாலையில், வெள்ளி தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
இதில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில், வைர வேலுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார்.
பல்வேறு பூஜைகளுக்குப் பின் சிவகண வாத்தியங்கள், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இன்னிசை வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, முருகப்பெருமான் கோவில் பிரகாரத்தில் பவனி வந்தார்.
பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து, சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கேசவன் மற்றும் உபயதாரர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.