லோக்சபா தேர்தல் பணியில் சிறந்த மேலாண்மை:கோவை கலெக்டருக்கு விருது வழங்கிய கவர்னர்
கோவை மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணியை சிறப்பாக மேலாண்மை செய்ததற்காகவும், ஓட்டுப்பதிவை அதிகரிக்க, பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டதற்காகவும், சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கான விருதை, கலெக்டர் கிராந்திகுமாருக்கு, தமிழக கவர்னர் ரவி வழங்கினார்.
கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. கோவை மற்றும் பொள்ளாச்சி லோக்சபா தொகுதிகள் உள்ளன. கோவை லோக்சபாவுக்குள் வரும் பல்லடம் சட்டசபை தொகுதி, திருப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. பொள்ளாச்சி லோக்சபாவுக்கு உட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தொகுதி, நீலகிரி லோக்சபா தொகுதிக்குள் செல்கிறது. இவ்வகையில், அருகாமையில் உள்ள திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய, கலெக்டர் கிராந்திகுமார், தேர்தல் மேலாண்மையை திறம்பட கையாண்டார். ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு பொறுப்பை பிரித்துக் கொடுத்து, பிரச்னையின்றி, அமைதியாக தேர்தல் நடத்திக் காட்டினார். ஓட்டு எண்ணிக்கையிலும் எவ்வித பிரச்னையும் எழவில்லை. கல்லுாரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, 18-19 வயது இளம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்க முனைப்பு காட்டினார்.
முதல் முறை ஓட்டளிப்பவர்கள், இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரப்பப்பட்டன. குறைவாக ஓட்டுப்பதிவான இடங்களில் தேர்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெண்களுக்கு ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது; ராட்சத பலுான் பறக்க விடப்பட்டது. கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது; ஆங்காங்கே 'செல்பி பாயிண்ட்' வைக்கப்பட்டன. அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மனித சங்கிலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இம்முயற்சியால், 2019 தேர்தலை காட்டிலும், 2024 தேர்தலில் ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து, 331 ஓட்டுகள் அதிகமாக பதிவாகின. இது, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த பலனாகவே பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, தேர்தல் மேலாண்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதற்காக, தமிழக தேர்தல் ஆணையத்தால், சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக, கலெக்டர் கிராந்திகுமார் தேர்வு செய்யப்பட்டார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, சென்னையில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டருக்கு, தமிழக கவர்னர் ரவி, விருது மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி, கவுரவித்தார். அரசின் தலைமை செயலர் முருகானந்தம், தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருது பெற்றது தொடர்பாக, கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகள், மூன்று லோக்சபா தொகுதிக்குள் இருந்தன. அதனால், மற்ற மாவட்ட நிர்வாகத்தினரை ஒருங்கிணைத்து பணிகளை மேலாண்மை செய்தோம். கேரள மாநிலத்தின் எல்லைப்பகுதி அமைந்திருந்தால், கேரள மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்தது. கோவை தொகுதி நகரப்பகுதிகள் அதிகமாக இருப்பதால், முந்தைய தேர்தல்களில் ஓட்டுப்பதிவு குறைவாக இருந்தது. கல்லுாரிகளில் முகாம்கள் நடத்தி இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தோம்; அவர்களை ஓட்டுச்சாவடிக்கு வரவழைத்தோம். தன்னார்வ அமைப்புகள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், ஓட்டு சதவீதம் அதிகரித்தது,'' என்றார்.