ஒருங்கிணைந்த பென்சன் திட்டம்; நெறிமுறைகள் வெளியிட்டது மத்திய அரசு
புதுடில்லி:ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்துக்கான நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தேசிய பென்சன் திட்டத்தில் இருக்கும் மத்திய அரசு அலுவலர்கள், தொழிலாளர்களுக்கு, ஒருங்கிணைந்த பென்சன் என்ற வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்து, 2019ல் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த வாய்ப்பை தேர்வு செய்த தொழிலாளர்கள், அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தின் விதிமுறைகள், தகுதிகள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த பென்சன் திட்ட தகுதிகள் வருமாறு:ஒரு தொழிலாளி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலை பார்த்திருந்தால், அவர் ஓய்வு பெற்ற நாளில் இருந்து பென்சன் வழங்கப்படும்.
FR 56 j விதிப்படி, கட்டாயப்படுத்தி ஓய்வு அளிக்கப்பட்ட தொழிலாளிக்கு, அந்த ஓய்வு நாள் முதல் பென்சன் வழங்கப்படும்.
25 ஆண்டுகள் பணியாற்றியபிறகு, தானாக முன் வந்து ஓய்வு பெற்றால், அவரது இயல்பான ஓய்வுக்கால தேதிக்கு பிறகு பென்சன் வழங்கப்படும்.
பணி நீக்கம் செய்யப்பட்டாலோ, ராஜினாமா செய்தாலோ ஒருங்கிணைந்த பென்சன் வழங்கப்படாது.
திட்டத்தின் பயன்கள்
குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முழுமையான பென்சன் வழங்கப்படும். ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் பென்சனாக வழங்கப்படும்.
பணிக்காலம் குறைவாக இருக்கும் பட்சத்தில், அதற்கு தகுந்தபடி பென்சன் கணக்கிட்டு வழங்கப்படும்.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், அதற்கு மேலும் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் மாதாந்திர பென்சன் கட்டாயம் வழங்கப்படும்.
25 ஆண்டுகள் பணியாற்றி, தானாக முன் வந்து ஓய்வு பெறுபவர்களுக்கு, அவர் இயல்பாக ஓய்வு பெற வேண்டிய தேதியில் இருந்து பென்சன் வழங்கப்படும்.பணி ஓய்வு பெற்ற பிறகு, பென்சன்தாரர் இறந்து விட்டால், அவருக்கு கடைசியாக வழங்கப்பட்ட பென்சனில் 60 சதவீதம் அவரது சட்டபூர்வ மனைவிக்கு வழங்கப்படும்.
பென்சனர் மற்றும் அவரது மனைவிக்கு, அகவிலைப்படி நிவாரணம் உண்டு என்பது உள்ளிட்ட நெறிமுறைகள் இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.