மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துக்கு 'மெட்டா இந்தியா' மன்னிப்பு

புதுடில்லி,
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ., அரசு தோற்றதாக, 'மெட்டா' நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறிய கருத்துக்கு, 'மெட்டா இந்தியா' நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப்' ஆகியவற்றின் தாய் நிறுவனமாக, 'மெட்டா' உள்ளது. இதன் தலைவராக மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், '2024ல் இந்தியாவைப் போல பல நாடுகளிலும் தேர்தல்கள் நடந்தன. இந்தியா உட்பட பல நாடுகளில் ஆளுங்கட்சியினர் தோல்வியைத் தழுவினர். பணவீக்கம் அல்லது அரசுகள் கொரோனாவை கையாண்ட விதம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம்' எனக் கூறியிருந்தார்.

மார்க்கின் இந்த கருத்து தவறானது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்து இருந்தார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் தலைவரான பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, மெட்டா இந்தியா நிறுவனம் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பினார்.

இந்நிலையில், மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் சிவ்நாத் துக்ரல், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை குறிப்பிட்டு வெளியிட்ட பதிவு:

கடந்த ஆண்டு தேர்தல்களில் ஆளுங்கட்சிகள் மீண்டும் வெற்றி பெறவில்லை என்பது பல நாடுகளுக்கு பொருந்தும். ஆனால் இந்தியாவுக்கு அல்ல.

இந்த கவனக்குறைவான தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா மிக முக்கிய நாடு. அதன் புதுமையான எதிர்காலத்தில் மெட்டா இருப்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement