தென்பெண்ணை ஆற்று தீர்த்தவாரி திருவிழாவிற்கு பந்தக்கால் நடும் விழா

திருக்கோவிலூர் : திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் வரும் 18ம் தேதி தீர்த்தவாரி விழா நடக்கிறது.

மணலுார்பேட்டை தென்பெண்ணையாற்றில் திருவண்ணாமலை அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் ஆண்டு தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதனை அடுத்து வரும் 17ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அண்ணாமலையார் புறப்பாடாகி பாதம் தாங்கிகளில் 18ம் தேதி மணலூர்பேட்டை வந்து அடைகிறார்.

விநாயகர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் அண்ணாமலையாரை வரவேற்று தென்பண்ணை நதிக்கு அழைத்துச் செல்லும் வைபவத்தை தொடர்ந்து தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பந்தலில் அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதனை அடுத்து நேற்று முன்தினம் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி பந்தல் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement