நெல்லில் கருகல் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு ஆலோசனை
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் வட்டாரத்தில் தனிச்சியம், சம்பக்குளம், சின்ன இலந்தைகுளம் கிராமங்களில் பயிரிட்ட நெற்பயிர்களில் இலை கருகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
மதுரை வேளாண் அறிவியல் நிலைய டாக்டர்கள் தெய்வேந்திரன், சுரேஷ், மாரீஸ்வரி, ரேவதி, நளின் ஆகியோர் நடவு, நேரடி விதைப்பு நெல் வயல்களில் நோய் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நோய் தாக்கிய இலைகள் அல்லது பயிரினை பறித்து அழித்து விட வேண்டும். நோய் பாதித்த வயல்களில் இருந்து அருகில் இருக்கும் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், வயல்களில் அதிகமாக நீர் நிறுத்துதல் கூடாது. நோய் தாக்குதல் ஆரம்பிக்கும்போது 20 சதவீதம் பசுஞ்சாண கரைசலை வயல்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை வடிகட்டி பெறும் தெளிந்த கரைசலுடன், 100 லிட்டர் நீரை கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
தாக்குதல் அதிகமிருந்தால் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் மருந்து கலவையினை 200 லிட்., நீரில் கலந்து காலை தெளித்து கட்டுப்படுத்தலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.