ஈஷாவில் மாட்டுப்பொங்கல் விழா பங்கேற்க வந்தவர்களால் பஸ்கள் 'புல்'

கோவை: ஈஷாவில் நடைபெறும் மாட்டுப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக, காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்டில் பஸ்களை பிடிக்க, பயணிகள் கூட்டம் அலைமோதியது.

வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறும். இந்தஆண்டும், மாட்டுப்பொங்கல் விழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகளை, ஈஷா யோகா மையம் செய்திருந்தது.

விழாவில் பங்கேற்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பஸ்களை காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கியது. நேற்று காலை 6:00 மணியிலிருந்து மதியம் 1:00 மணி வரை, அரசு போக்குவரத்துக்கழகம், சிறப்பு பஸ்களை இயக்கியது.

கோவை மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் மாட்டுபொங்கல் விழாவில் பங்கேற்பதற்கு, பஸ்சை பிடிக்க காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்டில் திரண்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், பயணிகளின் கூட்டத்துக்கு தகுந்தாற் போல், சிறப்பு பஸ்களை நேற்று இயக்கியது. நேற்று காலை 6:00 மணியிலிருந்து, மாலை 3:00 மணி வரை ஈஷாவுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை.

அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் திருவிழாவில் பங்கேற்க, பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் பயணிகளின் வருகைக்கு குறைவில்லை. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்களின் இயக்கம் அதிகரிக்கப்பட்டது' என்றனர்.

Advertisement