காங்கிரசுக்கு தாவ பிரீத்தம் கவுடா ஆர்வம்
பெங்களூரு: தலைவர்கள் மீது அதிருப்தியில் உள்ள, பா.ஜ.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா, காங்கிரசில் இணைய ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் பா.ஜ., -- ம.ஜ.த., என மூன்று கட்சிகளிலும் உட்கட்சி பூசல், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாகவே திருப்தி தெரிவித்து, கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகின்றனர். சூழ்நிலையை உணர்ந்த உள்ளூர் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் அரசியல் எதிர்காலத்தை மனதில் கொண்டு, கட்சி தாவலுக்கு தயாராகின்றனர்.
ஒரு பக்கம் காங்கிரஸ் அரசை கவிழ்க்க, சரியான சந்தர்ப்பத்துக்காக பா.ஜ., காத்திருக்கிறது.
மற்றொரு பக்கம் பா.ஜ., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்களை தன் வசம் ஈர்க்க, காங்கிரஸ் திரைமறைவில் முயற்சிக்கிறது.
பா.ஜ.,வில் இருந்து காங்கிரசுக்கு தாவ ஆலோசிக்கும் தலைவர்கள் பட்டியலில், ஹாசனின் முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடாவும் இடம் பெற்றுள்ளார்.
ம.ஜ.த.,வுடன் பா.ஜ., கூட்டணி வைத்த நாளில் இருந்தே, பிரீத்தம் கவுடா எரிச்சலில் உள்ளார். அவ்வப்போது தன் கோபத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறார்.
கட்சி நிகழ்ச்சிகள், கூட்டத்திலும் பங்கேற்பது இல்லை. இவர் காங்கிரசில் இணைய ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஹாசன் ம.ஜ.த.,வின் பாதுகாப்பு கோட்டையாகும். அங்கு கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், ஹாசன் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. தொகுதியில் பீரித்தம் கவுடா தனக்கென தொண்டர் படையை வைத்துள்ளார். இவர் காங்கிரசுக்கு சென்றால், கட்சிக்கு பலம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.