பசுக்களை வாங்க மறுத்த உரிமையாளர் தாய், சகோதரியிடம் வழங்கிய அமைச்சர்

பெங்களூரு: பசுக்களின் மடி அறுக்கப்பட்ட உரிமையாளரின் தாய், சகோதரியிடம், அமைச்சர் ஜமீர் அகமது கான், மூன்று பசுக்களை வழங்கினார். இதில், பசுக்களின் உரிமையாளர் கர்ணன் கலந்து கொள்ளவில்லை.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டில் வசிப்பவர் கர்ணன். இவர், பசுக்களை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான மூன்று பசுக்கள், காட்டன்பேட் பகுதியில், ஜன., 12ல் அதிகாலையில் சுற்றித் திரிந்தன.

விடிந்ததும் மூன்று பசுக்களின் மடியும் வெட்டப்பட்ட விஷயம் தெரியவந்தது. காயமடைந்த பசுக்கள் மீட்கப்பட்டு, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.

கேமராக்கள் ஆய்வு



கர்ணன் அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பசுக்களின் மடியை வெட்டியதும், அவரிடம் விசாரித்த போது, பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இவர், பெங்களூரில் சில ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், இங்குள்ள தையல் கடை ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போது, 'அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்' என கடை உரிமையாளர் கூறினார்.

இதை ஏற்க மறுத்த பசுக்களின் உரிமையாளர், 'விசாரணை நடத்த வேண்டும். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பசுக்கள் ஏதும் தங்களுக்கு வேண்டாம்' என தெரிவித்திருந்தார். இச்சம்பவம் பெரிய அளவில் பரபரப்பானது.

இந்நிலையில், மாட்டின் உரிமையாளர் கர்ணனின் தாயார் சவரி அம்மாள், சகோதரி அமுதாவை, நேற்று அமைச்சர் ஜமீர் அகமது கான், தன் வீட்டுக்கு வரவழைத்தார். முன்பு கூறியபடி, அவர்களிடம் மூன்று பசுக்களை ஒப்படைத்தார். இதில், கர்ணன் கலந்து கொள்ளவில்லை.

அரசியல்



அமுதா கூறுகையில், ''என் அண்ணன் கர்ணன், பசுவை மறுத்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஜமீரண்ணா நல்ல மனதுடன் மாட்டை கொடுத்து உள்ளார். இதிலும் சிலர் அரசியல் செய்கின்றனர். நாங்கள் எம்.எல்.ஏ.,வுடன் இருக்கிறோம்,'' என்றார்.

இதே வேளையில், நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறுகையில், ''இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது,'' என்றார்.

பசுக்களின் மடியை அறுத்த பீஹார் நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர். குடிபோதையில் பசுவின் மடியை அறுத்ததாக கூறி உள்ளார். இதில் மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும். அப்பாவியை கைது செய்துள்ளதாக கூறிய பா.ஜ.,வினரின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

பரமேஸ்வர்,

உள்துறை அமைச்சர்

மடி அறுக்கப்பட்ட பசுக்களின் உரிமையாளரின் தாய், சகோதரியிடம் பசுக்களை வழங்கிய அமைச்சர் ஜமீர் அகமது கான்.

Advertisement