விபத்தில் அமைச்சர் லட்சுமி காயம்: லாரி டிரைவர் மீது போலீசில் புகார்

பெலகாவி: மரத்தில் கார் மோதிய விபத்தில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக லாரி டிரைவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். பெலகாவி ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆவார். கடந்த 13ம் தேதி இரவு, பெங்களூரில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

பலத்த சேதம்



இந்த கூட்டம் முடிந்ததும், வீட்டில் சங்கராந்தி பண்டிகை கொண்டாட, பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை, டிரைவர் சிவபிரசாத் ஓட்டினார்.

காரில் லட்சுமியுடன் அவரது சகோதரரும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான சன்னராஜ் கட்டிஹோளி, லட்சுமியின் பாதுகாவலர் யரப்பா ஆகியோரும் பயணம் செய்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு பெலகாவி நகரில் இருந்து 55 கி.மீ., துாரத்தில் உள்ள கிட்டூர் தாலுகா, அம்பதகட்டி கிராஸ் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரி மீது மோதி, சாலையை விட்டு இறங்கி மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில், காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.

காருக்குள் இருந்த லட்சுமி உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த கிட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, லட்சுமி உள்ளிட்டோரை மீட்டு வேறு காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு சென்றதும், காரில் இருந்து லட்சுமியால் இறங்க முடியவில்லை. முதுகு அதிகமாக வலிப்பதாக கூறினார். இதனால் அவர், ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்டார். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, லட்சுமியின் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது தெரிந்தது.

இதனால் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சன்னராஜ் தலையிலும் காயம் ஏற்பட்டது. டிரைவர், பாதுகாவலர் லேசான காயம் அடைந்தனர். நாய் குறுக்கே வந்ததால் காரை திருப்பிய போது விபத்து ஏற்பட்டது என்று முதலில் கூறப்பட்டது.

காரை கவனக்குறைவாக ஓட்டியதாக டிரைவர் சிவபிரசாத் மீது, லட்சுமியின் பாதுகாவலர் யரப்பா புகார் செய்தார். அதன்படி, அவரிடம் போலீசார் விசாரித்தார்.

இண்டிகேட்டர்



இந்நிலையில், கிட்டூர் போலீஸ் நிலையத்தில் சிவபிரசாத் நேற்று அளித்த புகார்:

அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பயணம் செய்த காரை ஓட்டி சென்றேன். தார்வாட் -- பெலகாவி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னால் ஒரு கன்டெய்னர் லாரி வலது பக்கமாக சென்று கொண்டிருந்தது.

ஆனால், இண்டிகேட்டர் எதுவும் போடாமல், லாரியை டிரைவர் இடது பக்கமாக திருப்பினார். இதனால் லாரி மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது விபத்து நடந்தது.

விபத்து நடந்ததை பார்த்தாலும் லாரியை டிரைவர் நிறுத்தாமல் சென்று விட்டார். லாரி டிரைவரின் அலட்சியத்தால் தான் விபத்து நடந்தது. அவரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகாரில் நாய் குறுக்கே வந்தது பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

விபத்து குறித்து சன்னராஜ் கூறியதாவது:

சங்கராந்தி பண்டிகை கொண்டாடுவதற்காக பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு காரில் புறப்பட்டு சென்றோம். துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கி உள்ளோம். விபத்து நடக்காமல் இருந்திருந்தால் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு சென்று இருப்போம்.

இந்த விபத்தில் டிரைவர் சிவபிரசாத் மீது எந்த தவறும் இல்லை. விபத்து நடப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு கூட என்னிடம் பேசினார். காருக்கு டீசல் போட வேண்டுமா என்று அவரிடம் கேட்டேன். இல்லை, இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கூறினார்.

எங்கள் வீட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று முன்கூட்டியே ஜோதிடர் ஒருவர் எச்சரித்து இருந்தார். அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது.

முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் எனக்கு போன் செய்து லட்சுமியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். அவரை பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement