திருவள்ளுவர் தினத்தில் விற்ற மதுபானங்கள் பறிமுதல் 

புதுச்சேரி: கலால் துறை உத்தரவை மீறி விற்பனை செய்யப்பட்ட 101 லிட்டர் சாராயம், 10 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

புதுச்சேரி கலால் துறை உத்தரவின்படி, நேற்று (15ம் தேதி) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபான கடைகள்,சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக் கடைகள் மூடப்பட்டன.

இதனை பயன்படுத்தி கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவுப்படி, தாசில்தார்கள் சிலம்பரசன், ரவிச்சந்திரன், ராஜேஷ்கண்ணா மற்றும் துணை தாசில்தார் ஜவஹர், வருவாய் ஆய்வாளர்கள் அடங்கிய3 பறக்கும் படையினர் புதுச்சேரி நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் சோதனை செய்தனர்.

அரங்கனுார், கனகசெட்டிகுளம், சேதராப்பட்டு,மணமேடு, மேட்டுப்பாளையம், கடுவனுார், சுத்துக்கேணி, தவளகுப்பம், அரியாங்குப்பம், கல்மண்டபம், மதகடிப்பட்டு மற்றும் திருக்கனுார் உள்ளிட்ட பகுதியில் கள்ளத் தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர்களிடம் இருந்து 101 லிட்டர் சாராயம் மற்றும் 10.44 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவைகளின் மதிப்பு ரூ. 19 ஆயிரத்து 38 ஆகும். மேலும், அபராதமாக ரூ. 23 ஆயிரம் வசூலிக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

Advertisement