உப்பு சப்பில்லாத சாப்பாட்டுக்கு 'குட் பை'
உங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது. இனிமேல் உப்பை குறைவாகச் சாப்பிட வேண்டும் என்று உங்கள் மருத்துவர் அறிவுறுத்தி உள்ளாரா? உப்பு சப்பில்லாமல் எப்படி சாப்பிடுவது என்று வருத்தப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். உங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நவீன கரண்டி.
மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கரண்டி (Electric spoon) 2022ம் ஆண்டே வடிவமைக்கப்பட்டு விட்டது. ஜப்பானைச் சேர்ந்த உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதன்முதலில் மின்சார சாப்ஸ்டிக்கை உருவாக்கியது. இதைக் கொண்டு சாப்பிட்டால், உணவில் உப்பு குறைவாக இருந்தாலும், நம் நாக்கு, உவர்ப்பு சுவையை உணர்ந்து ஆறுதல் அடையும்.
அதே போல் இப்போது இந்த மின்கரண்டி உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்தக் கரண்டியில் இரண்டு எலக்ட்ரோடு இருக்கும். ஒன்று கைப்பிடியில், மற்றொன்று உணவு எடுக்கும் பகுதியில் இருக்கும். உணவை எடுக்கும்போது, உணவில் இருக்கும் சோடியம் அயனிகளை மட்டும் இந்தக் கரண்டி ஈர்த்துப் பிரித்துவிடும்.
சோடியம் அயனிகள் தனியே நாக்கில் படும்போது, உவர்ப்பு சுவையை நாக்கு உணர்ந்து கொள்ளும். இதனால் குறைவான உப்பு இருந்தாலும், நமக்கு நிறைவாக இருக்கும்.
ஆரம்பத்தில் 200 கரண்டிகள் மட்டும் வடிவமைக்கப்பட்டன. அவை அனைத்தும் விற்றுவிட்டன. இதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி முதல் மறுபடியும் இந்த ஸ்பூன் உற்பத்தியை துவங்க உள்ளனர். இதில் ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால், தங்களுடைய உடலிலே பேஸ்மேக்கர் முதலிய மருத்துவ மின் கருவிகள் வைத்திருப்பவர்கள் இதைப் பயன்படுத்தக்கூடாது என்பது மட்டுமே.