புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி

நேரு எம்.எல்.ஏ., ஆணையருடன் ஆய்வு

புதுச்சேரி: புதிய பஸ் நிலைய கட்டுமான இறுதிகட்ட பணிகளை நேரு எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையருடன் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் 4.41 ஏக்கர் பரப்பு கொண்ட ராஜிவ் காந்தி பஸ் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 29 கோடி மதிப்பில் மேம்படுத்த கடந்த ஜூன் மாதம் பணிகள் துவங்கியது.

31 கடைகள், காத்திருப்பு வளாகம், கழிப்பறை, ஆம்னி பஸ் நிறுத்தம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட ஏராளமான வசதிகளுடன் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. கழிவறைக்கு தேவையான தண்ணீர் இணைப்பு, மழைநீர் வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட சில பணிகள் நடந்து வருகிறது.

ஏ.எப்.டி., மைதானத்தில் இயங்கி வரும் தற்காலிக பஸ் நிலையத்தால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் கட்டுமான பணியை விரைந்து முடிக்கும் பணியில் புதுச்சேரி நகராட்சி ஈடுப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறுதி கட்ட கட்டுமான பணியை நேரு எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன் நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, பஸ் நிலைய முகப்பு, பஸ் நிலையத்தின் வெளிப்பகுதி பழக்கடைகள் இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குடிநீர், கழிப்பறை, சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தம், பி.ஆர்.டி.சி., டெப்போவில் இருந்து நேரடியாக பஸ் நிலையத்திற்கு வரும் பாதை உள்ளிட்ட அடிப்படை பணிகள் முடிந்த பின்பு பஸ் நிலையம் திறக்க நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.

Advertisement