போகி பண்டிகையின்போது காற்று மாசுபாடு குறைந்தது: விழிப்புணர்வு பிரசாரத்திற்கு கைமேல் பலன்

புதுச்சேரி: மாசுக்கட்டுபாட்டு குழுமத்தின் தொடர் விழிப்புணர்வுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. போகி பண்டிகையன்றுஇந்தாண்டு காற்றுமாசுபாடு குறைந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

போகி பண்டிகையன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம். காலப்போக்கில் இந்த பொருட்களுடன் வீட்டில் கிடக்கும் பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட்களையும் எரிக்க துவங்கினர். இதனால் போகி பண்டிகையின்போது காற்றின் மாசுக்களின் அளவு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்தாண்டு, புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், அண்ணா நகர், காரைக்காலில் ஒரு இடத்திலும் போகியன்று காற்றின் மாசுக்களை 24 மணி நேரமும் தொடர்ந்து மாசுக்கட்டுபாட்டு குழுமம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது தெரிய வந்துள்ளது. இதில் மிதவை துகள்களின் அளவு 54 மைக்ரோகிராம், கந்தக ஆக்சைடுகளின் அளவு 10.4 மைக்ரோகிராம், நைட்ரஜன் ஆக்சைடுகளின் அளவு 15.5 மைக்ரோகிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோகிராம் என பதிவாகியுள்ளது.

கடந்தாண்டு மிதவை துகள்களின் அளவு 138 மைக்ரோகிராம், நைட்ரஜன் ஆக்சைடுகளில் அளவு 23.6 மைக்ரோகிராம் என பதிவாகி இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் அளவுகோலின்படி, மிதவை துகள்களின் அளவு ஒரு கியூபிக் மீட்டருக்கு 100 மைக்ரோ கிராம் அளவுக்குள்ளும், கந்தக அக்ஸைடுகள் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு ஒரு கியூபிக் மீட்டருக்கு தலா 80 மைக்ரோகிராம் அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அமோனியாவின் அளவு, ஒரு கியூபிக் மீட்டர் அளவிலான காற்றில் 400 மைக்ரோகிராம் அளவுக்கு இருக்கலாம். இதன் மூலம் புதுச்சேரியை பொருத்தவரை, போகி பண்டிகையின்போது காற்றில் கலந்த மாசுக்களின் அளவு கட்டுக்குள் உள்ளது தெரிய வந்துள்ளது.

போகியன்று ஏற்பட்ட துாறலும், மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாகவும் இந்த ஆண்டில் காற்றின் மாசுக்களின் அளவு குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

விழிப்புணர்வு பிரசாரம்



இதுகுறித்து, புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் ரமேஷ் கூறுகையில், 'போகியன்று பொருட்களை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு பிரசாரத்தை துவங்கியது.

இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. விழிப்புணர்வு காரணமாக இந்த ஆண்டில் காற்றின் மாசுக்களின் அளவு குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. போகி பண்டிகையின்போது மட்டுமல்ல, அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்கள், பாலீத்தீன் பைகள், டயர், டியூப் போன்ற பொருட்களை எப்போதும் எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

இப் பொருட்களை எரிப்பதினால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்து காற்று மிகவும் மாசடைகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு, உலகம் வெப்பமயமாதல் போன்றவை மனித குலத்திற்கு பெரும் சவாலாக தலைதுாக்கி உள்ளது. தற்போதைய காலகட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் கைகோர்த்து முயற்சியில் இறங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்' என்றார்.

Advertisement