ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அரசு இன்று முக்கிய முடிவு?

பெங்களூரு: ெஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை, கடந்தாண்டு பிப்ரவரியன்று, கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு கமிஷன் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே தாக்கல் செய்திருந்தார். இதை வெளியிட, சில சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பெங்களூரில் நேற்று பரமேஸ்வர் அளித்த பேட்டி:

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, நாளை (இன்று) நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். அறிக்கையை ஆய்வு செய்த பின், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த அறிக்கையை, அமைச்சரவையில் திறக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இல்லையெனில், இத்தகவல் வெளியே கசிந்துவிடும்.

இது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படுமா, இல்லையா என்பதை இப்போதே என்னால் கூற முடியாது. அறிக்கையை படித்த பின்னர் தான் தெரிய வரும்.

இந்த அறிக்கை தயாரிக்க, வரி செலுத்துவோரின், 160 கோடி ரூபாயை அரசு செலவழித்து உள்ளது. எனவே, செலவழித்த பணத்திற்காகவாவது, அறிக்கையை வெளியிட வேண்டும்.

அறிக்கையை செயல்படுத்துவது அரசின் விருப்பத்துக்கு உட்பட்டது. ஆனாலும், 160 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளதால், அதில் உள்ளதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், தன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

'சங்கடம் வந்தால், வெங்கட ரமணா என, அழைப்பதை போன்று, முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தால், சித்தராமையாவுக்கு ஜாதிவாரி அறிக்கை நினைவுக்கு வரும்.

இந்த அறிக்கையை வெளியிடுவதில், பா.ஜ.,வுக்கோ அல்லது தனிப்பட்ட முறையில் எனக்கோ, எந்த ஆட்சேபனையும் இல்லை. அடிமட்ட சமுதாயங்களும் கல்வி, சமுதாயம், பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது, பா.ஜ.,வின் அடிப்படை கொள்கை.

இதற்காக மாநில அரசு முயற்சித்தால், எங்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கும். ஆனால் அரசியல் சதுரங்க விளையாட்டில், ஜாதி வாரி அறிக்கையை பகடைக்காயாக பயன்படுத்துவதை, பா.ஜ., எதிர்க்கிறது. தன் பதவியை தக்க வைத்து கொள்ள, அறிக்கையை ஏணியாக பயன்படுத்த கூடாது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement