திருக்குறள் முற்றோதுதல், கலை நிகழ்ச்சிகள் கோலாகலம் திருவள்ளுவர் தின விழாவில் தமிழர்கள் உற்சாகம்

ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தின விழா, தமிழகத்தை கடந்து பல மாநிலங்கள் மற்றும் நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இவ்வகையில், நேற்று பெங்களூரு ஹலசூரு ஏரி அருகே உள்ள திருவள்ளுவர் சிலை பகுதியில் விழா நடந்தது.

திருக்குறள் முற்றோதுதல் அறமணை சீனிவாசன் தலைமையில் இராசு மாறன், சா.மூர்த்தி, சரவணன், ஏ.ஆர்.சுகுமாரன் உட்பட அடியார்கள் 1,330 திருக்குறளை முற்றோதுதல் பாடினர்.

விஸ்வகவி திருவள்ளுவர்



இதை தொடர்ந்து விஸ்வகவி திருவள்ளுவர் சங்கம் சார்பில், சிலை வளாகத்தில் பொங்கல் இட்டனர். சங்க தலைவர் பையப்பனஹள்ளி ரமேஷ் வரவேற்றார். தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு பெங்களூரு தமிழ் சங்கத்தினர் மாலை அணிவித்தனர்.

உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரு மத்திய தொகுதி பா.ஜ., - எம்.பி., பி.சி.மோகன், சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிவாஜிநகர் ரிஸ்வான் அர்ஷத், புலிகேசி நகர் ஏ.சி.ஸ்ரீனிவாஸ்.

பெங்களூரு மத்திய தொகுதி பா.ஜ., தலைவர் சப்தகிரி கவுடா, மாநகராட்சி கல்வி நிலை குழு முன்னாள் தலைவர் தன்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் குணசேகர், சரவணா, ஆனந்தகுமார், ரகு தேவராஜ், கர்நாடகா தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு தலைவர் செந்தில் குமார்.

பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜேந்திரன். காந்திநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் சரவணா, பாரதிநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் சுபாஷ், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார், ஆதர்ஷ் ஆட்டோ சங்க தலைவர் சம்பத், சடகோபன் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் உரிமையாளர் சடகோபன், தன்னுரிமை மனமகிழ் மன்ற தலைவர் ராஜசேகர் ஆகியோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

கர்நாடக ஹிந்து நாடார் அசோஷியேஷன், கர்நாடகா தேவர் சங்கம், முதலியார் சங்கம், செங்குந்தர் சங்கம், உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., நலிவுற்றோர் நல அறக்கட்டளை, திருவள்ளுவர் சங்கம், திருநெல்லை விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம், ஸ்ரீகிருஷ்ண பகவான் ஸ்ரீதிரவுபதி அம்மன் திருக்கோவில், கர்நாடகா வன்னிய குல சத்திரிய சேவா சங்கம், நாம் சோழர் அமைப்பு, கர்நாடக தி.மு.க., மற்றும் பல தமிழ் அமைப்பினர் என கட்சி பேதமின்றி கலந்து கொண்டனர்.

இளைஞர்கள் சங்கமம்



விழாவுக்கு முதியோர் வருகை தந்தது போன்று, இளைஞர்களும் அதிக அளவில் காணப்பட்டனர். அடுத்த தலைமுறையினரும் திருவள்ளுவரின் மீது வைத்திருக்கும் மதிப்பை எடுத்து காட்டியது.

கலை நிகழ்ச்சிகள்



திருவள்ளுவர் சிலை பகுதியில் பரதநாட்டியம், சிலம்பம், நாடகக் கலைஞர்கள், இசை கச்சேரி, நடனம், தாரை தப்பட்டை என கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களும், கன்னட பாடல்களும் மாறி மாறி ஒலித்தன. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். திருவள்ளுவர் தினத்தில் அனைவரும் தமிழராய் ஒன்றிணைந்து விழாவை சிறப்பித்தனர்.

இதை தொடர்ந்து, மேடையில் கூட்டம்நடந்தது.

விழாவில் நடிகரும், இயக்குனருமான சுந்தர்ராஜன் பேசும் போது, தொண்டையில் சிரமம் ஏற்பட்டது. அப்போது குடிக்க தண்ணீர் கேட்டார். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுக்க, 'இதுபோல கர்நாடகாவில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு கொடுங்கள்' என நகைச்சுவையாக பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், ''பொங்கல் திருநாளில், பெங்களூரு தமிழர்களாகிய உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. திருவிழா மிக பிரமாதமாக உள்ளது. இங்குள்ளோர், சென்னையில் உள்ள எனது வீட்டிற்கு வரவும். வந்து வயிறார சாப்பிட வேண்டும். அன்று தான் எனக்கு பொங்கல்,'' என, நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சுந்தர்ராஜன் நகைச்சுவை



பெங்களூரு தமிழ் சங்க தலைவர் கோ.தாமோதரன் தலைமையில், சங்க நிர்வாகிகள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், சங்கத்தில், பாரம்பரிய முறைப்படி புதுப்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. சங்க நடன பள்ளியின் சார்பில் நாட்டியம், இசை வகுப்பு மாணவர்களின் இன்னிசை, சங்க காமராஜர் பள்ளியின் மாணவ - மாணவியரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

நாட்டுப்புற கலைஞர்களின் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பறை இசை முழக்கமும், சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.


தமிழ் சங்கம் பொங்கல் விழா


- நமது நிருபர் -

Advertisement