சி.பி.ஐ.,யிடம் 'முடா' வழக்கு மனு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா மீதான, 'முடா' வழக்கில் சி.பி ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரி, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 27ம் தேதிக்கு, உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்தது தொடர்பான வழக்கை, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆனால் இந்த வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரி மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி நாக பிரசன்னா விசாரிக்கிறார். நேற்று மனு மீது விசாரணை நடந்தது.
பாரபட்ச விசாரணை
சிநேகமயி கிருஷ்ணா சார்பில் மணிந்தர் சிங், முதல்வர் சார்பில் மூத்த வக்கீல்கள் ரவிவர்ம குமார், அபிஷேக் மனு சிங்வி, மாநில அரசு சார்பில் கபில் சிபல் ஆஜராகினர்.
புகார்தாரர் தரப்பு வக்கீல் மணிந்தர் சிங் வாதிட்டதாவது:
இந்த வழக்கில் விசாரணை பாரபட்சமற்றதாகவும், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். முடா வழக்கில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் பாரபட்சமற்ற விசாரணை நடப்பது கடினமாக உள்ளது.
இந்த வழக்கில் சுதந்திரமான விசாரணை தேவைப்படுகிறது. மாநில அரசால் நியமிக்கப்பட்ட போலீசார் இங்கு விசாரணையை நடத்துகின்றனர். இதனால் கண்டிப்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெற சாத்தியம் இல்லை.
145 கோப்புகள்
முதல்வர் மனைவிக்கு கிடைத்த 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 மனைகள் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நிலத்தை முடா உடனே திரும்ப பெற்றது. இதன் மூலம் வழக்கிலிருந்து குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் அரசு செயல்படுவது தெளிவாக தெரிகிறது.
முடாவில் இருந்து 145 கோப்புகளை எடுத்துள்ளனர். அந்த கோப்புகளின் கதை என்ன என்று இன்னும் தெரியவில்லை. லோக் ஆயுக்தா போலீசார் கூட கோப்புகளை திரும்ப பெற முயற்சி செய்யவில்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
முழு தகவல்
இந்த வாதத்திற்கு முதல்வர் சார்பில் ஆஜரான வக்கீல் ரவிவர்ம குமார் ஆட்சேபம் தெரிவித்தார். 'பொருத்தமற்ற வாதங்களை இங்கு முன் வைப்பதாக கூறினார்.
மனுதாரர் தாக்கல் செய்திருக்கும் மனுக்கள் முழுமையற்றவை. முழுமையான தகவல்களை முதலில் கொடுக்கட்டும்' என்றார்.
மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில், 'மனுதாரர் தாக்கல் செய்து இருக்கும் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் தரவேண்டும்' என்று கேட்டு கொண்டார்.
ரவிவர்ம குமார் மீண்டும் வாதாடுகையில், 'முதல்வர் மீதான வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்,' என்று கேட்டுக் கொண்டார்.
கூடுதல் டி.ஜி.பி.,
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாக பிரசன்னா, ''முடா வழக்கு விசாரணையை லோக் ஆயுக்தா போலீசார் தொடர்ந்து விசாரிக்க வேண்டும்.
''விசாரணையை ஐ.ஜி., கண்காணிக்க வேண்டும். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்பு அறிக்கையை லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு செய்ய வேண்டும்.
''அடுத்த விசாரணை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் லோக் ஆயுக்தா போலீசார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.