பா.ஜ., - எம்.பி., காகேரி வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை

உத்தரகன்னடா: உத்தரகன்னடா தொகுதி பா.ஜ., - எம்.பி., விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி. உத்தரகன்னடா சிர்சியின் காகேரி கிராமத்தில் இவரது வீடு உள்ளது. இக்கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், அவ்வப்போது வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும்.

சில மாதங்களுக்கு முன், இவரது தோட்டத்தில் காட்டு யானை புகுந்தது. இரண்டு நாட்களுக்கு முன், அதிகாலை விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரியின் வளர்ப்பு நாய், வீட்டு வளாகத்தில் படுத்திருந்தது. அப்போது அங்கு புகுந்த சிறுத்தை, நாயை வேட்டையாட முயற்சித்தது. நாய் வேகமாக ஓடி ஒளிந்து கொண்டதால் உயிர் தப்பியது.

இக்காட்சி வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இவரது வீட்டு சுற்றுப்பகுதியில், சிறுத்தை பதுங்கியிருக்க கூடும்.

இதை பிடிக்கும்படி வனத்துறைக்கு, காகேரி உத்தரவிட்டுள்ளார். வனத்துறையினரும் அவரது வீட்டருகில் முகாமிட்டுள்ளனர். சிறுத்தையை கண்காணிக்கின்றனர். கூண்டும் வைத்துள்ளனர். இதுவரை சிறுத்தை சிக்கவில்லை.

குடியிருப்பு பகுதியிலேயே சிறுத்தை நடமாடுவதால், கவனமாக இருக்கும்படி, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement