'கிரஹ ஆரோக்யா' திட்டம் மாநிலம் முழுதும் விரிவாக்கம்
பெங்களூரு: கோலாரில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட 'கிரஹ ஆரோக்யா' திட்டத்தை, பிப்ரவரியில் இருந்து மாநிலம் முழுதும் விரிவுபடுத்த, சுகாதார துறை முடிவு செய்துள்ளது.
'கிரஹ ஆரோக்யா' திட்டத்தின் மூலம், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வீட்டுக்கே சென்று பரிசோதனை செய்யப்படும். நீரிழிவு, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, ஒரு மாதத்துக்கு தேவையான மாத்திரைகள் வழங்கப்படும்.
* கோலாரில் துவக்கம்
கோலாரில் கடந்தாண்டு அக்டோபரில் துவங்கிய இத்திட்டத்துக்கு, மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதை மாநிலம் முழுதும் விரிவுபடுத்த சுகாதார துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் சீனிவாஸ் கூறியதாவது:
கிரஹ ஆரோக்யா திட்டத்தில், ஒரு குழுவில் சமூக சுகாதார ஊழியர்கள், முதன்மை பாதுகாப்பு அலுவலர்கள், ஆஷா பணியாளர்கள் அடங்கிய குழுக்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவினர் முதலில் கிராமங்களுக்கு சென்று, அங்கு வீடு வீடாக ஆய்வு செய்வர். பின், நகர்ப்புற வீடுகளில் ஆய்வு செய்வர். இவ்வாறு வீடுகளில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் இருந்தால், அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்குவர்.
இந்த மருந்தை ஒவ்வொரு மாதமும் சரிபார்த்து, தொடர்ந்து தேவையான மாத்திரைகள் வழங்கப்படும். செவ்வாய், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இக்குழுவினர், 15 வீடுகளுக்கு சென்று ஆய்வு பணிகள் மேற்கொள்வர்.
* அடுத்த மாதம்
சிகிச்சை தேவைப்படுவோருக்கு, கிரஹ ஆரோக்யா திட்டத்தின் கீழ், சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு கோலாரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாதந்தோறும் மாத்திரைகளுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவளிப்பது தவறு. தொடர் பரிசோதனைகள், மாத்திரைகள் வினியோகிப்பதால், நோய்களை கட்டுப்படுத்த முடியும்.
இத்திட்டத்தை விரிவுபடுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நான்கு மாதங்களுக்கு போதிய அளவு மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோலாரில் கிரஹ ஆரோக்யா திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதை மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் சுகாதார சேவை கொண்டு சேர்க்கப்படும்.தினேஷ் குண்டுராவ், அமைச்சர்சுகாதார துறை
இத்திட்டத்தின் கீழ், கோலாரில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், மனநோய் பிரச்னைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இத்திட்டம் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்பட்ட பின், ஆஸ்துமா உட்பட நுரையீரல் நோய்களை கண்டறிதல் இவற்றுடன் சேர்க்கப்படும்.சிறுநீரக கோளாறுகளுக்கு டயாலிசிஸ் தொடர்ந்து செய்யப்படுகிறதா என்ற தகவல்களை மருத்துவ குழுவினர் சேகரிப்பர். மேற்கத்திய உணவு முறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'கொழுப்பு கல்லீரல் நோய்' அதிகரித்து வருகிறது. இதை கண்டறியப்பட்டு உரிய வழிகாட்டுதல் வழங்க சுகாதார துறை முடிவு செய்துள்ளது.