சிவலிங்கத்தின் மீது விழாத சூரிய கதிர்கள் கவி கங்காதரேஸ்வரர் கோவிலில் ஏமாற்றம்

பெங்களூரு: மகர சங்கராந்தி அன்று, கவி கங்காதரேஸ்வரர் விக்ரகம் மீது, சூரிய கதிர் விழவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பெங்களூரு குட்டஹள்ளியில் உள்ள கவி கங்காதரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்றது. தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். திங்கட்கிழமைகள், பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.

ஆண்டுதோறும் மகர சங்கராந்தி நாளன்று, கவி கங்காதரேஸ்வரர் விக்ரகம் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்படி விழுந்தால் நன்மைகள் நடக்கும். மக்கள் சுபிக்ஷமாக இருப்பர் என்பது ஐதீகம்.

அதன்படி நேற்று முன் தினம் மாலை 5:14 மணி முதல் 5:17 மணி வரை, கவி கங்காதரேஸ்வரர் மீது சூரிய ஒளி படிந்திருக்க வேண்டும். இந்த காட்சியை பார்க்க நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், மேகமூட்டமான சூழ்நிலை இருந்ததால், சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழவில்லை.

இது போன்று நடப்பது, இதுவே முதன் முறையல்ல. இதற்கு முன் இரண்டு முறை சிவலிங்கத்தின் மீது, சூரிய ஒளி விழவில்லை. இம்முறையும் விழாததால், அபசகுனமா என, பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏன் என்றால் இதற்கு முன், சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழாத போது, கொரோனா தொற்று மக்களை வாட்டியது. இப்போதும் சூரிய ஒளி படியாததால், மக்கள் கிலியில் உள்ளனர்.

இது குறித்து, கவி கங்காதரேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சோமசுந்தர் கூறியதாவது:

மகர சங்கராந்தி அன்று, சூரியன் தன் கதிர் வீச்சை சிவலிங்கத்தின் மீது படரவிட்டு வழிபடுவதாக ஐதீகம். இம்முறையும் சிவலிங்கத்தின் மீது, சூரிய ஒளி விழுந்துள்ளது. ஆனால் மேகமூட்டமாக இருந்ததால், சூரிய ஒளி சிவலிங்கத்தை தொட்டு செல்வதை காண முடியவில்லை.

எத்தனை நிமிடங்கள் ஒளி விழுந்தது என்பது தெரியவில்லை. சிவலிங்கத்தை சூரிய கதிர் தொட்டுள்ளது. எனவே மக்கள் பயப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement