காங்., நிர்வாகியின் நியமனம் நிறுத்தம்

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் தலைவராக சீனிவாஸ் நியமிக்கப்பட்டதை, கட்சி மேலிடம் நிறுத்தி வைத்துள்ளது.

கர்நாடக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவராக, முன்னாள் எம்.எல்.ஏ., பூர்ணிமா கணவர் சீனிவாஸ் என்பவரை, சிவகுமார் நியமித்து இருந்தார். இந்த நியமனம் கட்சி மேலிட தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி நடந்த காங்கிரஸ் கூட்டத்தின் போது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர்கள் சிலர், 'கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்து உள்ளோம். எங்களுக்கு எந்த பதவியும் கிடைப்பது இல்லை.

'ஆனால் பா.ஜ.,வில் இருந்து விலகி நமது கட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சீனிவாசுக்கு தலைவர் பதவி கொடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்சிக்காக சிறிது காலம் அவர் உழைக்கட்டும்; பின், அவருக்கு பொறுப்பு கொடுத்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்றனர்.

இது பற்றி கட்சி மேலிடம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தலைவராக சீனிவாஸ் நியமிக்கப்பட்டதை மேலிடம் நிறுத்தி வைத்துள்ளது.

Advertisement