தலை முடியை தானம் கொடுக்கும் சென்னிமலை வாலிபர்
சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூர் ரோடு, திருமுகம் மலர்ந்தபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் பத்மா தம்பதியினரின் மகன் கண்ணன், 26. இவர் பி.எஸ்.சி., விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு முடித்துள்ளார். தற்போது போட்டோ கிராபராக பணிபுரிந்து வருகிறார். இவர், தன் தலை முடியை வளர்த்து, அதை புற்று நோயால் பாதிக்கப்பட்டு முடி உதிர்ந்த பெண்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்.
பல பேர் கண்ணனை, ஏன் பெண் போல் முடி வளர்க்கிறாய், இது உனக்கு தேவையா என கிண்டலும், கேலியும் செய்வது உண்டு. ஆனால், கண்ணன், தன் முடியை தானம் செய்வதில் உறுதியாக உள்ளார். இதுவரை அவர், பலமுறை முடி தானம் செய்துள்ளார். இவர் தற்போது கடந்த, 18 மாதங்களாக முடி வளர்த்து வருகிறார். அவர் முடியை அழகுக்காகவோ, தனது வசீகர தோற்றத்திற்காகவோ வளர்க்கவில்லை. சேவை செய்வதற்காகவே முடியை வளர்த்தி, அதை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடி இழந்த பெண்களுக்கு கொடுத்து வருகிறார். தற்போது அடர்ந்த முடியுடன், பெண் போல் தோற்றமளிக்கும் அளவு முடி வளர்த்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது அவரை தொடர்பு கொண்டால், உடனடியாக முடியை கொடுத்து விட தயாராக உள்ளார். முடி வேண்டும் எனில் கண்ணனை, 63846 00505 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.