'வரியை பாதியாக குறைக்க கோரி முறையிடுங்கள்'

ஈரோடு: ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்க செயலாளர் பாரதி, தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் வீடு, சொத்து வரி குறைக்க கோரி, மனு வழங்கினர். பின்னர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை வழங்கி வருகின்றனர்.


அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு பகுதியில் குடியிருப்பு, வணிக வளாகம், தொழிற்சாலை பகுதிகளுக்கு வரி கூடுதலாகவும், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் கூட வரி குறைவாகவே உள்ளது. ஒப்பீட்டுக்காக, 3 பகுதிகளில் உள்ள வரி விதிப்பை பட்டியலிட்டு வழங்கி உள்ளோம். இந்த வரிகளை, ஈரோடு மாநகராட்சி பகுதியில் குறைக்க வேண்டும். தவிர, தற்போது ஓட்டு கேட்டு தேர்தல் பிரசாரத்துக்கு வரும் அமைச்சர்கள், மேயர், துணை மேயர், கவுன்சிலர்களிடமும் இந்த ஒப்பீட்டை தெரிவித்து, வரியை பாதியாக குறைக்க வலியுறுத்துங்கள் என பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளனர். அந்த நோட்டீஸில், குடியிருப்பு பகுதிக்கு ஈரோடு - கோவை - திருச்சியில், 600 சதுரடிக்குள் முறையே, 5.20 ரூபாய், 2.75 ரூபாய், 2.86 ரூபாய், 1,200 சதுரடிக்குள் முறையே, 6.05 ரூபாய், 3.30 ரூபாய், 3.44 ரூபாய் என்றும், வணிக நிறுவனங்களுக்கு சதுரடிக்கு முறையே, 22.74 ரூபாய், 19 ரூபாய், 13.74 ரூபாய், தொழிற்சாலைகளுக்கு சதுரடிக்கு முறையே, 13.50 ரூபாய், 10 ரூபாய், 8.02 ரூபாய் என, விதித்துள்ளனர். இதை பார்த்தாவது, ஈரோடு மாநகர பகுதியில் வரியை பாதியாக குறைக்க வேண்டும்.

Advertisement