தங்கவயல் செக் போஸ்ட்!
அதிகாரிகள் நடுக்கம்!
தங்கமான நகருக்கு உப லோக் ஆயுக்தா நீதிபதி வந்தாலும் வந்தாரு, ஆபீசர்கள கிடுகிடுன்னு நடுங்க வெச்சிட்டாரு. முனிசி., தாலுகா அலுவலகம், என எல்லா அலுவலகத்திலும் சம்பளத்தை விட கிம்பளம் பல மடங்கு இருப்பதாக கண்டுபிடித்திருக்காங்க. எதையும் கையில் நோட்டாக வாங்காமல் ஆன் லைன் சர்வீஸ் தானாம்.
அதிகாரிகள் , ஊழியர்கள் மாதாந்திர சம்பளம் எவ்வளவு. அவர்களின் வங்கி கணக்கில் பண பரித்தனை எப்போ எப்போ எவ்வளவு வந்தது யாரிடம் இருந்து வந்தது என்ற முழு விபரத்தையும் துருவி கேட்டதில், நிறைய தில்லாலங்கடி வேலை நடந்திருக்கிறதை கண்டுபிடித்திருக்காங்களாம்.
அசெம்பிளிகாரரின் பி.ஏ., என்ற நபர் ஒருவருக்கு நிறைய பட்டுவாடா போயிருக்குதாம். இதென்ன மாமூல் வசூலோ. அதிகாரிகளின் வட்டாரத்தில் கிளம்பிய புகைச்சல், அரசியல் வட்டாரத்தையும் கலக்கியிருக்கு.
வசூல் செய்யாதபடி 'செக்!'
வருஷா வருஷம் தமிழர் திருநாள் விழா நடத்துவதா பொய் சொல்லி, ஓசூர் அசெம்பிளிக்காரர் வரை கைக்கார தலைவர் ஒருத்தர் வசூல் செய்து வந்ததாராம். எங்கோ, யாரோ நடத்துற விழாவுல அவர், 'தலை' காட்டுவாராம். அந்த விழாவை தானே நடத்தினதா பந்தா காட்டி மோசடி செய்து வந்தாராம்.
விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு மோசடி நபரின் வேலைகள் தெரிய வந்து செக் வெச்சிருக்காங்களாம். இனி அந்த நபர் அடுத்து விழா பேர்ல வசூல் நடத்த நெருங்க முடியாதபடி பல பேரை உஷார்படுத்திட்டாங்களாம்.
பாழாகும் வரி பணம்!
கோல்டு சிட்டி முனிசி., கட்டுப்பாட்டில் உள்ள ரா.பேட்டை பஸ் நிலையத்தில் கோடி ரூபாய் செலவுல வணிக வளாகம் கட்டி முடிச்சாங்க.
அதில் உள்ள 32 கடைகளை வர்த்தக பயன்பாட்டுக்கு ஏலம் விட்டிருந்தால், டிபாசிட் தொகையும், வாடகையும் ஐந்தாண்டில் பல கோடி ரூபாய் வருமானமாக கிடைச்சிருக்கும். அரசு பணத்தை வீணாக்கிற முனிசி., அதிகாரிகள் போக்கு பற்றி உப லோக் ஆயுக்தா நீதிபதிக்கு தெரிவித்திருந்தால் சரியான 'லெசன்' எடுத்திருப்பாரு.
'அரசு பணம் அதுவும் மக்கள் வரிப்பணம். அதை முறைகேடு செய்றவங்கள சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கலாமா'ன்னு, ஜனங்களுக்கும் ஊழல் தடுப்பு அதிகாரிங்க அறிவுரை கூறியிருக்காங்க.
தொடரும் சீட்டு மோசடி!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பெனிபிட் ஸ்கீம் பேரில் பல பேரிடம் பல லட்சம் வசூலித்து அறிவித்தபடி எந்த பொருளையும் வழங்கல. பெரிய மோசடி செய்தாங்க. காக்கி நிலையத்தில் புகார் போனது. வழக்கு பதிவானது. மோசடி செய்தவங்க கோர்ட்டில் ஜாமின் வாங்கியாச்சு.
பணம் செலுத்தி ஏமாந்த ஜனங்களுக்கு அந்த தொகை எப்போ வாபஸ் கிடைக்கும். அதுக்கு என்ன வழி.
சட்டம் என்ன சொல்ல போகுதோ. கோல்டு சிட்டியில் இப்பவும் கூட பல இடங்களில் இதேபோல் பல பெனிபிட் ஸ்கீம் சீட்டுகள் தொடங்கி இருக்காங்க. ஜனங்க ஏமாறாமல் இருக்க மோசடி பேர்வழிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி மோசம் போகக்கூடாது.
மறுபடியும் பல இடங்களில் இத்தகைய பெனிபிட் திட்ட வசூலில் இறங்கியுள்ளவங்க பேர்ல காக்கிகள் நடவடிக்கை எடுக்க வேணும். தடுப்பு நடவடிக்கையை தொடக்கத்திலேயே செய்ய வேணும்.