அமைச்சர் பிரியங்க் கார்கே ஆதரவாளர் வீட்டில் 'ரெய்டு'
கலபுரகி: கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, அமைச்சர் பிரியங்க் கார்கே ஆதரவாளர் ராஜு கப்பனுார் வீட்டில் சி.ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பீதர், பால்கியை சேர்ந்தவர் சச்சின் மோனப்பா பாஞ்சால், 26. கடந்த மாதம் 26ம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே ஆதரவாளர் ராஜு கப்பனுார் உட்பட ஆறு பேர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து இருந்தார்.
இந்த வழக்கை, முதலில் பீதர் ரயில்வே போலீசார் விசாரித்தனர். பின், சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. சி.ஐ.டி., -- டி.எஸ்.பி., சுலைமான் தாசில்தார் தலைமையிலான போலீசார் பீதர், கலபுரகி மாவட்டங்களில் முகாமிட்டு விசாரணை நடத்துகின்றனர்.
இந்த வழக்கில், ராஜு கப்பனுார் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ராஜு கப்பனுாரை கலபுரகி டவுனில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, சில ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். ராஜு கப்பனுார், கலபுரகி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலராக இருந்தவர்.