மைசூரில் டாக்டரை சந்தித்த நடிகர் தர்ஷன்

மைசூரு: கொலை வழக்கில் ஜாமினில் உள்ள நடிகர் தர்ஷன், நேற்று தனது முதுகுவலி தொடர்பாக, டாக்டரை சந்தித்து பேசினார்.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், ஜாமினில் உள்ள நடிகர் தர்ஷன், பெங்களூரில் வசித்து வருகிறார். பொங்கலை ஒட்டி, மைசூரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை, நகரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு சென்ற அவர், தனது முதுகுவலி தொடர்பாக, டாக்டரின் அறிவுரை கேட்க வந்திருந்தார்.

டாக்டர் அஜய் ஹெக்டேவிடம் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வருவதால், அவரை தர்ஷன் சந்தித்தார். அவரை சந்தித்த பின், மீண்டும் பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார்.

இது தொடர்பாக டாக்டர் அஜய் ஹெக்டே கூறுகையில், ''முதுகுவலி தொடர்பாக அறிவுரை கேட்க மட்டுமே தர்ஷன் வந்திருந்தார். அது தவிர வேறு எதுவும் இல்லை,'' என்றார்.

Advertisement