கிருஷ்ண பைரேகவுடா மீது கவர்னரிடம் திடீர் புகார்

பெங்களூரு: வருவாய் துறையில் நடக்கும் ஊழலை தடுக்க அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நடவடிக்கை எடுக்கவில்லை என்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி புகார் செய்துள்ளார்.

கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி நேற்று ராஜ் பவனில் சந்தித்து, வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா மீது புகார் செய்தார்.

பின், தினேஷ் கல்லஹள்ளி அளித்த பேட்டி:

வருவாய் துறையில் ஊழல் அதிகமாக நடக்கிறது. இது குறித்து ஆவணங்களுடன் வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடாவிடம் புகார் செய்தும், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழல், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை அவர் காப்பாற்றி வருகிறார்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாப்பூர் தாலுகா ஹுலிகுண்டே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இந்த முறை கேட்டில் தாசில்தார், உட்கோட்ட அலுவலருக்கு தொடர்பு உள்ளது. இந்த முறைகேடு பற்றி அறிந்தும் அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி, கவர்னரிடம் புகார் செய்து உள்ளேன்.

இவ்வாறு கூறினார்.

Advertisement