பிறந்த மகனை பார்த்த தந்தை மறுநாள் காலை குளிருக்கு பலி

பெங்களூரு: மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இரவில் மருத்துவமனை வளாகத்தின் வெளியில் படுத்திருந்த கணவர், கடும் குளிரில் உயிரிழந்தார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் சவுதுள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் நாகேஷ், 47, - அஸ்வத்தம்மா தம்பதி. இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் கூலி தொழிலாளர்கள்.

கர்ப்பமாக இருந்த அஸ்வதம்மா, மைசூரு கே.ஆர்., மருத்துவமனை வளாகத்தில் உள்ள செலுவாம்பா மருத்துவமனையில் ஜன., 10ல் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு அவருக்கு, ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், மனைவிக்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால், ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்நேரத்தில், உறவினர்கள் யாரும் அவருடன் இல்லை. மகப்பேறு மருத்துவமனை என்பதால், மருத்துவமனைக்குள் அவர் உறங்க அனுமதி இல்லை. எனவே, மருத்துவமனை வளாகத்தில் வெட்டவெளியில் தரையில் படுத்து உறங்கி உள்ளார்.

மறுநாள் காலை, வழக்கம் போல் மருத்துவமனை துப்புரவு ஊழியர்கள், வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அங்கு படுத்திருந்த நாகேஷை எழுப்பவில்லை. அவர் எழுந்திருப்பார் என காலை 6:00 முதல் 7:30 மணி வரை காத்திருந்தனர். சந்தேகம் அடைந்த ஊழியர்கள், அருகில் சென்று அழைத்தும் எழவில்லை. மருத்துவ ஊழியர்களை வரவழைத்து பார்த்தபோது, அவர் உயிரிழந்திருந்தார்.

அதிர்ச்சி அடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர். இம்மருத்துவமனையில் 410 படுக்கை வசதிகள் உள்ளன.

ஆனால், நோயாளிகளுடன் வருவோர் உறங்க 20 முதல் 40 பேருக்கு மட்டுமே இடம் உள்ளது. மற்றவர்கள் வெட்ட வெளியில் வெயில், குளிர், மழையில் படுத்து உறங்க வேண்டிய அவலம் நிலவுகிறது.

Advertisement