மலர் கண்காட்சி இன்று துவக்கம்

பெங்களூரு: குடியரசு தினத்தை ஒட்டி பெங்களூரு லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று துவங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு, சுதந்திர தின விழாவை ஒட்டி பெங்களூரு லால்பாக் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், லால்பாக் பூங்காவில் இன்று முதல் 27ம் தேதி வரை 12 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது.

இதுகுறித்து தோட்டக்கலை துறை இயக்குனர் ரமேஷ் நேற்று அளித்த பேட்டி:

குடியரசு தினத்தை ஒட்டி மலர் கண்காட்சி நாளை (இன்று) லால்பாக்கில் துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், தோட்டக்கலை அமைச்சர் மல்லிகார்ஜுன், போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி, எம்.எல்.ஏ., உதய் கருடாச்சார் துவக்கி வைக்கின்றனர்.

சமர்ப்பணம்



இந்த ஆண்டு நடக்கும் மலர் கண்காட்சி, மகரிஷி வால்மீகிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அவரது வாழ்க்கை, சாதனைகள், ராமாயண வரலாறு ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மகரிஷி வால்மீகி தவம் செய்தது போல் கண்ணாடி மாளிகையின் மையப்பகுதியில் சிலை வைக்கப்படும். இந்த சிலை 10 அடி உயரமும் 38 அடி சுற்றளவு கொண்டது. சுமார் 1.50 லட்சம் டச்சு ரோஜாக்கள், 400 கிலோ கில்லி ரோஜாக்களை பயன்படுத்தி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வால்மீகி ஆசிரமம், ஹனுமர், ஜடாயு, ஜாம்ப வந்தா மற்றும் பல கவிஞர்களின் உருவ சிலையும் இங்கு இருக்கும்.

தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை மலர் கண்காட்சி நடக்கும். வார நாட்களில் பெரியவர்களுக்கு 80 ரூபாயும்; வார இறுதி நாட்களில் 100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். குழந்தைகளுக்கு அனைத்து நாட்களிலும் 30 ரூபாய் கட்டணம். பள்ளி சீருடை அணிந்து வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.

வாகன நிறுத்தம்



கண்காட்சியை பார்க்க தங்களது சொந்த வாகனத்தில் வருவோர் லால்பாக் அருகே உள்ள ஹாப்காம்ஸ் வளாகம், சாந்தி நகர் பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தம், அல் அமீன் கல்லுாரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு கூறினார்.

Advertisement