கன்னட மூத்த நடிகர் சரிகம விஜி மரணம்
பெங்களூரு: கன்னட மூத்த நடிகர் சரிகம விஜி உடல்நல குறைவால் நேற்று மரணம் அடைந்தார். இறுதி சடங்கு இன்று நடக்கிறது.
கன்னட திரை உலகில் மூத்த நடிகர் விஜயகுமார் என்ற சரிகம விஜி, 76. நுரையீரல் தொற்று, மூச்சுத் திணறால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டார்.
பெங்களூரு யஷ்வந்த்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை மரணம் அடைந்தார்.
மஹாலட்சுமி லே -- அவுட்டில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கன்னட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இன்று இறுதி சடங்கு நடக்கிறது.
பெங்களூரு விமானபுரா பகுதியில் பிறந்த சரிகம விஜி என்.ஜி.இ.எப்., தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்தவர். அந்த காலகட்டத்தில் நிறைய நாடகங்களில் நடித்துள்ளார். 'சம்சாரலி சரிகம' என்ற நாடகத்தை எழுதி நடித்தார்.
இந்த நாடகம், அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அந்த வெற்றி, அவருக்கு 'சரிகம விஜி' என்ற பெயரையும் பெற்றுக் கொடுத்தது.
சங்கர்நாத், ஆனந்த் நாக், அம்பரிஷ், விஷ்ணுவர்த்தன், தர்ஷன், சிவராஜ் குமார், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கன்னடத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் இயக்குனராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர்.
இவரது சேவையை பாராட்டி, கர்நாடக அரசு 'ராஜ்யோத்சவா விருது' வழங்கிஉள்ளது.