சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 'கருப்பு பொங்கல்' வைத்து அனுசரிப்பு

நாமக்கல்: நாமக்கல் அருகே, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், இரண்டாம் ஆண்டாக, 'கருப்பு பொங்கல்' வைத்து அனுசரித்தனர்.


நாமக்கல், மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், ஆண்டாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக்கூறி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள், 'சிப்காட்' அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 'சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' அறிவிப்புபடி, மோகனுார் தாலுகா வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள், பொங்கல் நாளான நேற்று முன்தினம், வளையப்பட்டி, 'சிப்காட்' அலுவலகத்தில், இரண்டாம் ஆண்டாக, 'கருப்பு பொங்கல்' வைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது, 'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். 'சிப்காட்' எதிர்ப்பு இயக்க அமைப்பாளர்கள் ராம்குமார், பழனிவேல், ரவீந்திரன், தண்டபாணி, செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement