முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் மாணவனுக்கு 'காக்லியர் மிஷின்'
நாமக்கல்: செவித்திறன் குறைபாடுடைய, 4ம் வகுப்பு மாணவனுக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 2.57 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'காக்லியர் மிஷின்' பொருத்தப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், செவித்திறன் குறைபாடுடைய, 4ம் வகுப்பு மாணவர் மிதுன் வர்ஷனுக்கு, 2 லட்சத்து, 57,250 ரூபாய் மதிப்பில், 'காக்லியர் மிஷினை' கலெக்டர் உமா வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: அரசு, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் உயிர்காக்கும் உயர் சிகிச்சைகளை பெறும் வகையில், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சம் ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லா சிகிச்சை பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட, 1,600 அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்று பயன்பெறலாம். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், செவித்திறன் குறைபாடுடைய, 4ம் வகுப்பு மாணவன் மிதுன் வர்ஷனுக்கு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், அரசு டாக்டர்கள் மூலம், 2 லட்சத்து, 57,250 ரூபாய் மதிப்புள்ள, 'காக்லியர் மிஷின்' பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த மாணவருக்கு பேச்சு பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.